நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்ட தேர்தல்களில், ஓடும் ரயில்களில் பணியாற்றும் லோக்கோ பைலட்டுகள், கார்டுகள், பயணச்சீட்டு பரிசோதகர்கள் உள்ளிட்ட இதர பணியாளர்கள் யாரும் ஓட்டு போட முடிவதில்லை. காரணம், வாக்களிப்பதற்கு வசதியாக இந்தப் பணியாளர்களுக்கு விடுமுறையளிக்கப்படுவதில்லை. விடுமுறையளித்தால் ரயில் சேவைகள் தடைபடும். இதனாலேயே அவர்களால் வாக்களிக்க முடிவதில்லை. இந்தப் பிரச்சினை நீண்டகாலமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில், ‘தேர்தல் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு தபால் வாக்குரிமை இருப்பது போல, தேர்தல் காலங்களில் ரயில்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் தபால் வாக்குரிமை அளிக்க வேண்டும்’ என்று பிரதமர் மோடி மற்றும் மத்திய சட்ட அமைச்சகத்துக்கு, கடந்த ஜனவரி மாதம் கோரிக்கை கடிதம் அனுப்பியிருந்தார் சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியனின் மதுரை கோட்ட உதவிச் செயலாளர் ராம்குமார்.
ராம்குமாரின் கோரிக்கையைப் பரிசீலிக்குமாறு தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றது பிரதமர் அலுவலகம். இதனைத் தொடர்ந்து, தலைமைத் தேர்தல் ஆணையத்தின் செயலாளர் அபிசேக் திவாரி, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு எண் 60(சி)-யில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தேர்தல் நாளன்று அத்யாவசிய பணிகளில் உள்ளவர்களுக்குத் தபால் வாக்குரிமை வழங்கப்படும் என்றும், அத்யாவசிய பணிகளில் ரயில்வே ஊழியர்கள் வருவதால் அவர்களுக்கும் தபால் வாக்குரிமை வழங்கப்படுகிறது என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து ராம்குமாரிடம் நாம் பேசியபோது, "இவ்வளவு காலமும் ரயில்வே ஊழியர்களுக்கு மறுக்கப்பட்டுவந்த தபால் வாக்குரிமை, இந்தத் தேர்தலில் கிடைத்திருப்பது மகிழ்ச்சி. ரயில்வே ஊழியர்களைப் போல தேர்தல் நாளன்று அத்யாவசிய பணிகளில் இருக்கும் அனைத்துத் துறை பணியாளர்களுக்கும் தபால் வாக்குரிமைக் கிடைத்துள்ளது" என்கிறார் பெருமிதமாக!