நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் ஏற்கனவே பள்ளி மாணவன் ஒருவரை வீடு தேடிபோய் சக மாணவர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து அண்மையிலும் நாங்குநேரியில் ஒரு பள்ளியில் தண்ணீர் பாட்டிலில் இருந்த தண்ணீரை மேலே சிந்திய மாணவனை சக பள்ளி மாணவன் அரிவாளால் வெட்டியது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் நாங்குநேரியில் பள்ளியில் மீண்டும் கத்திக்குத்து நிகழ்ந்ததாகச் சொல்லப்படும் சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாங்குநேரி தாலுகாவுக்கு உட்பட்ட அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வரும் மாணவர்கள் சிலர் கத்தியால் தலைமை ஆசிரியரை தாக்கியதாக மூன்று மாணவர்கள் மீது புகார் கொடுக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் கைது செய்யப்பட்ட மூன்று மாணவர்கள் ஒருநாள் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் வெளியே வந்த மாணவர்கள் 'எங்கள் கைப்பையில் இருந்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் எதையும் போலீசார் கைப்பற்ற வில்லை. எங்களிடம் இருந்ததாக எடுத்துக் கொடுக்கப்பட்ட ஆயுதங்கள் ஆசிரியர்கள் கொடுத்தது. அதன் அடிப்படையிலேயே வழக்கு பதிவு செய்துள்ளனர். தலைமை ஆசிரியரே திட்டமிட்டு பொய் புகார் அளித்துள்ளார்' என நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் சம்பந்தப்பட்ட மாணவர்கள் புகார் மனு கொடுத்துள்ளனர்.