கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. பெரும் மாநகரங்களை போல் மாவட்ட தலைநகரங்களில், சிறு நகரங்களில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் வீட்டை விட்டு வெளியே வந்து சுற்றுகின்றனர்.
![Exit Permit Card - Structured District Administration](http://image.nakkheeran.in/cdn/farfuture/J7AwsFMO95FYxz-Qjb9xHkI-u78lGdRcZjk9bVYV6AE/1585761550/sites/default/files/inline-images/IMG-20200401-WA0016.jpg)
தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்தப் போக்கு அதிகமாக இருப்பது காவல்துறை கண்காணிப்பில் தெரியவந்துள்ளது. அப்படி வெளியே சுற்றுபவர்களை தடுக்க வாகன ஓட்டிகள் மீது வழக்கு போடுவது, வாகனங்கள் பறிமுதல், ஓட்டுநர் உரிமம் நிரந்த ரத்து போன்ற பல செயல்களில் ஈடுப்பட்டாலும் அது குறையவில்லை என மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமியுடனான சந்திப்பில் தெரிவித்துள்ளார் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி.
அதனைத் தொடர்ந்து அவர்களின் ஆலோசனைபடி, தற்போது புதியதாக ஒரு விதிமுறை மக்களிடையே புகுத்தப்பட்டுள்ளது. அதன்படி திருவண்ணாமலை, ஆரணி, வந்தவாசி, செய்யார் என 4 நகராட்சிகள், பேரூராட்சிகள், இதனை ஒட்டியுள்ள கிராம ஊராட்சிகளில் வசிக்கும் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வருவதற்கான நாட்களை பிரித்துள்ளார்கள்.
![Exit Permit Card - Structured District Administration](http://image.nakkheeran.in/cdn/farfuture/pbhc0gNOpqjnFHiOg8SaVxAYkK9i90IgsNjw3jWpQOE/1585761586/sites/default/files/inline-images/IMG-20200401-WA0020.jpg)
அதன்படி இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு கலர் அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது. அதற்காக இளஞ்சிவப்பு, ஊதா என இரண்டு விதமான கலர் அட்டைகள் அச்சடிக்கப்பட்டுள்ளன. இளஞ்சிவப்பு அட்டை வைத்திருப்பவர்கள் திங்கள், புதன், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமையிலும், ஊதா கலர் அட்டை வைத்திருப்பவர்கள் செவ்வாய், வியாழன், சனி, ஞாயிற்றுக்கிழமையிலும் வீட்டிலிருந்து காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணிக்குள் வந்து தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கிக்கொண்டு சென்றுவிடவேண்டும்.
வீட்டுக்கு ஒருவர் மட்டும்மே அதுவும் 60 வயதுக்கு குறைவானவர்கள் மட்டுமே வர வேண்டும் எனச்சொல்லப்பட்டுள்ளது. இந்த அட்டைகள் ஒவ்வொரு வீடுகளுக்கும் வழங்கும் பணி நடைபெறுகிறது. அதனை மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி இருவரும் திருவண்ணாமலை நகரத்தில் சில வீடுகளுக்கு நேரில் சென்று வழங்கினர்.
அட்டையில் குறிப்பிட்டுள்ள நாட்களை தவிர மற்ற நாட்களில் வெளியே வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மருத்துவ பிரச்சனை என்றால் எல்லா நாளும் வெளியே சென்று வரலாம், அதற்கு நாள், நேரக்கட்டுப்பாட்டுக்கு தடையில்லை என்றும் கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.