Skip to main content

அறுபதாயிரம் கோடி ரூபாய் கோவில் சொத்துகளை யாருக்கும் பத்திரப்பதிவு செய்யக்கூடாது! – திருப்போரூர் சார் பதிவாளருக்கு உத்தரவு!

Published on 05/09/2020 | Edited on 05/09/2020

 

CHENNAI HIGHCOURT

 

திருப்போரூர் கந்தசாமி கோவில் மற்றும் ஆளவந்தான் கோவில்களுக்குச் சொந்தமான 60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை, யாருக்கும் பத்திரப்பதிவு செய்யக்கூடாது என,  திருப்போரூர் சார் பதிவாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் அமைந்துள்ள கந்தசாமி கோவில் மற்றும்  ஆளவந்தான் கோவிலுக்குச் சொந்தமான, சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய 2,000 ஏக்கர் நிலம் உள்ளது.

இந்தச் சொத்துக்களை அபகரிக்க 20-க்கும் மேற்பட்ட குழுக்கள் கண்கொத்திப் பாம்பாக இருப்பதாகவும், அதனைத் தடுத்து நிறுத்தி, கோவில்களுக்குச் சொந்தமான சொத்துகளை வருவாய்த் துறை அதிகாரிகள் அளவீடு செய்யவும், அதன் அறிக்கையை தாக்கல் செய்யவும், வருவாய்த்துறைச் செயலருக்கு உத்தரவிடக்கோரி, வழக்கறிஞர் ஜெகன்நாத் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதுபோல,   கோவிலுக்குச் சொந்தமான  சொத்துகள் பதிவேட்டை தாக்கல் செய்ய, கோவிலின் செயல் அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டுமெனவும், கோவிலின் சொத்துகளை வேறு யாருக்கும் பெயர் மாற்றம் செய்யக்கூடாது என, பதிவுத்துறை தலைவர் மற்றும் திருப்போரூர் சார் பதிவாளருக்கு உத்தரவிட வேண்டுமெனவும் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு, திருப்போரூர் கந்தசாமி கோவில் மற்றும் ஆளவந்தான் கோவிலின் சொத்துகளை,  மறுஉத்தரவு வரும் வரை யாருக்கும் பத்திரப்பதிவு செய்யக்கூடாது என,   திருப்போரூர் சார் பதிவாளருக்கு உத்தரவிட்டது.

 

Ad

 

மேலும், மனுவுக்குப் பதிலளிக்கும்படி, தமிழக அரசு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், செப்டம்பர் 10-ஆம் தேதிக்கு வழக்கை தள்ளிவைத்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்