தென்னகத்து காசி என்றழைக்கப்படும் ஸ்வர்ண பைரவர் கோவிலுக்குள் நுழைந்த நாகப்பாம்பு திடீரென சிவனுக்கு பூஜை செய்த சம்பவம் அங்கிருந்த பக்தர்களை பரவசப்படுத்தியது.
ஈரோடு மாவட்டம் இரட்டைசுற்றிபாளையம் பகுதிக்கு அருகே உள்ளது அவல்பூந்துறை. இந்தப் பகுதியில்தான் தென்னகத்து காசி என்றழைக்கப்படும் ஸ்வர்ண பைரவர் கோவில் அமைந்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த திருக்கோவிலில் உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளிமாநில பக்தர்கள் என ஏராளமானோர் வந்து செல்வர்.
இந்தக் கோவிலுக்குள் திடீரென புகுந்த நாகப்பாம்பு நேராக ஸ்வர்ண பைரவரின் சிலையை நோக்கிச் சென்றுள்ளது. அப்போது, சிறிது நேரம் ஸ்வர்ண பைரவரின் சிலையைச் சுற்றிவந்த நாகப்பாம்பு ஒருகட்டத்தில் சாமியை தரிசனம் செய்யும் வகையில் திடீரென படமெடுத்து ஆடியுள்ளது. அதுமட்டுமல்லாமல், பைரவர் சிலையின் கழுத்துப் பகுதியில் ஏறிக்கொண்ட நாகப்பாம்பு அந்த விக்ரகத்தைப் பின்னும் வகையில் சுற்றி சுற்றி வந்தது. மேலும், இந்த நாகப்பாம்பு பைரவருக்கு பூஜை செய்ததாகக் கூறப்பட்ட நிலையில், வாசனைப் பூக்களை சாமியின் காலில் தூவி விட்டது.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பக்தர்கள், பைரவர் சிலைக்கு நாகப்பாம்பு பூஜை செய்த சம்பவத்தை தங்களது செல்போனில் வீடியோ எடுத்தனர். தற்போது, இந்த வீடியோ காட்சிகள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள், நாகப்பாம்பே பைரவருக்கு பூஜை செய்துள்ளது என பக்தி பரவசத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.