கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஈரோடு வழியாக ரயிலில் பயணம் செய்த 8 பெண்களின் நகைகளை கொள்ளையர்கள் பறித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த ரயில் பயணிகள் ஈரோட்டில் சிக்னலுக்காக நிற்கும் ரயில்கள் பகுதியில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஈரோடு ரயில் நிலையத்துக்கு ஒவ்வொரு நாளும் 80-க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. குறிப்பாக இரவு நேரத்தில் மட்டும் அதிகமான ரயில்கள் வருகின்றது. ஈரோடு ரயில் நிலையத்தில் நான்கு பிளாட்பார்ம் மட்டுமே உள்ளன. இதில் தொலைதூர ரயில்கள் நிற்க வசதியாக 3 பிளாட்பார்ம்கள் உள்ளது . இதனால் இரவு நேரத்தில் வரும் ரயில்களுக்கு ரயில்வே ஸ்டேசனில் பிளாட்பார்ம் கிடைக்காத சூழல் ஏற்படுகிறது.
இதனால் ஈரோடு ரயில் நிலையத்திற்கு வரும் ரயில்கள் சிக்னலுக்காக, ரயில் நிலையத்திற்கு ஒரு கிலோ மீட்டர் தொலைவிலேயே காட்டுப் பகுதியில் சுமார் 20 நிமிடம் வரை நிற்க வேண்டியுள்ளது. இரவு நேரம் என்பதால் பயணிகள் நன்கு தூங்கிக் கொண்டிருப்பார்கள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிக்னல் பகுதியில் ஏற்கனவே மர்ம நபர்கள் புகுந்து ஜன்னலோரமாக படுத்திருக்கும் பெண்களை நோட்டம் விட்டு, அவர்கள் அணிந்திருக்கும் செயினை பறிக்கும் சம்பவம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் ஈரோட்டில் சிக்னலுக்காக நின்றிருந்த ரயிலில் மட்டும் எட்டு பெண் பயணிகளிடம் திருட்டு நபர்கள் செயினை பறித்துக் கொண்டு ஓடியுள்ளனர். இந்த சம்பவம் ரயில் பயணிகளிடம் பெரும் பீதியை கிளப்பியுள்ளது.
இதுகுறித்து ரயில்வே பயணிகள் கூறும்போது, “சமீபகாலமாக ரயிலில் பயணம் செய்யும் பயணிகளிடம் செயின் பறிப்பது செல்போன் திருடுவது போன்ற சம்பவங்கள் அதிகளவில் நடந்து வருகிறது. குறிப்பாக ஈரோட்டில் சிக்னலுக்காக நின்று இருக்கும் ரயில்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருக்கிறது. எனவே இந்தப் பகுதியில் ரயில்வே போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும்” என்கிறார்கள். ஈரோடு வழியாக ரயில் பயணமா? அதுவும் இரவில் என்றால் பெண்கள் அதிக பாதுகாப்புடன் தான் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.