தமிழக முதலமைச்சரின் அறிவுரையின் பேரில், மாநகர் போக்குவரத்துக் கழக, அயனாவரம் பணிமனையில், மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று (27/05/2022) ஆய்வு செய்தார்கள். அதனைத் தொடர்ந்து, பெரம்பூர் மற்றும் அயனாவரம் பணிமனைகளில் பணிபுரியும் பணியாளர்களில் கடந்த மூன்று மாதங்களில் அதிக நாட்கள் பணிக்கு வராத, அதிக நாட்கள் விடுப்பு எடுத்த பணியாளர்களுடன் கலந்துரையாடினார்கள்.
இக்கூட்டத்தில், போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் பேசியதாவது, தமிழக முதலமைச்சர், பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுவதற்காக அறிவித்த மகளிருக்கு சாதாரணக் கட்டணப் பேருந்துகளில் இலவசமாக பயணம் மேற்கொள்ளும் திட்டத்தினை முழுமையாக செயல்படுத்திட அறிவுறுத்தி உள்ளார்கள். போக்குவரத்துக் கழகம் நஷ்டத்தில் இயங்கினாலும், பொது மக்களுக்கு சேவை செய்கின்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. அதனை ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்பட வேண்டும். பொதுமக்களிடமிருந்து எனக்கு வருகின்ற பல்வேறு மனுக்களில் 50 சதவிகிதத்திற்கு மேல் வேலைவாய்ப்பு கோரியே வருகின்றன. அப்படி இருக்கையில், நமது போக்குவரத்துக் கழகப் பணியாளர்கள் கையில் வேலையை வைத்துக் கொண்டு. பணிக்கு வராமல் இருப்பது, நிர்வாகத்திற்கும், தங்கள் குடும்பத்திற்கும் எவ்வளவு பெரிய இழப்பு என்பதை உணர வேண்டும்.
மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் அனைத்து பணிமனைகளுக்கும் நான் நேரில் சென்று, நீண்ட நாட்கள் பணிக்கு வராமல் இருக்கும் பணியாளர்களை சந்தித்து, அவர்களுக்கு அறிவுரைகளை வழங்கி. பேருந்துகளை முழுமையாக இயக்கிட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறேன். முதற்கட்டமாக கடந்த வாரத்தில் கலைஞர் கருணாநிதி நகர் பணிமனைக்கு சென்று வந்தேன். அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் பெரம்பூர் மற்றும் அயனாவரம் பணிமனைகளை சேர்ந்த உங்களை சந்திக்கின்றேன்.
முதலமைச்சர் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சிறப்பாக தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். மகளிர் நகரப் பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ளும் திட்டத்திற்காக நிதியினை அரசு வழங்கி வருகிறது. ஏற்கனவே, 40% பயணம் மேற்கொண்ட மகளிரின் எண்ணிக்கையானது, தற்பொழுது 61% ஆக உயர்ந்துள்ளது. சாதாரணக் கட்டணப் பேருந்துகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பேட்டா வழங்குவது. ஊதிய நிர்ணயம் பே மேட்ரிக்ஸ்-ல் பொருத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அரசின் பரிசீலனையில் உள்ளன. அவை ஊதிய ஒப்பந்தத்தில் இறுதி செய்யப்படும்.
ஏழை எளிய கிராமப்புற மக்களும் பயன்பெறும் வகையில், பேருந்துகளை அரசுடைமையாக்கி, போக்குவரத்துக் கழகங்களை உருவாக்கிய பெருமை முன்னாள் முதலமைச்சர் தலைவர் கலைஞர் அவர்களையே சாரும். இதன் வாயிலாக தற்பொழுது சுமார் 20,000 பேருந்துகள் இயக்கப்பட்டு. சுமார் 1,20,000 பணியாளர்கள் பணிபுரிகின்ற வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தியாவில் சுமார் 6 மாநிலங்களில் மட்டுமே போக்குவரத்துக் கழகங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. அதுவும், தலைவர் கலைஞரை முன்னோடியாக கொண்டே மற்ற மாநிலங்களில் போக்குவரத்துக் கழகங்கள் உருவாக்கப்பட்டன.
கடந்த காலங்களில் ஏற்பட்ட கடன். கரோனா காலத்தில் பேருந்துகள் இயக்கப்படாத நிலையில் வருமான இழப்பு மற்றும் டீசல் விலை உயர்வு போன்ற காரணங்கள் இருந்தாலும், பேருந்து பயணக் கட்டணத்தை உயர்த்தாமல் பேருந்துகளை இயக்கிட வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள், பணியாளர்கள் முழுமையாக பணிக்கு வருகை தந்தும். புதிய தொழில்நுட்பங்களை புகுத்தியும், நடவடிக்கை மேற்கொண்டால், தினம் தினம் ஏற்படும் நஷ்டத்தை குறைக்க முடியும். அதற்கான நடவடிக்கையினை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.
நமது முதலமைச்சர் எங்கு சென்றாலும், மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து, அதனை நிவர்த்தி செய்து வருகிறார்கள். அதை போலவே, அவரது பிரதிநிதிகளான எங்களிடம், பணியாளர்கள் தங்களின் கோரிக்கைகளை தெரிவித்தால், அதற்கு நிர்வாக ரீதியாக நடவடிக்கை மேற்கொண்டு, தீர்த்து வைக்கிறோம். முழுமையாக அனைத்துப் பேருந்துகளையும் இயக்கி, நமது போக்குவரத்துக் கழகம் சிறப்பாக செயல்படுவதற்கு உங்கள் ஒவ்வொருவரின் ஒத்துழைப்பும் அவசியம் என தெரிவித்தார்கள்.
கரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக, மாணவ, மாணவிகளுக்கான இலவச பேருந்து பயண அட்டையானது வழங்கப்படாமல் இருந்தது. பள்ளி மற்றும் கல்லூரிகள் விரைவில் திறக்கப்பட உள்ள நிலையில், மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் இலவச பேருந்து பயண அட்டைகளை விரைவில் வழங்கிட முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அதனைத் தொடர்ந்து, அயனாவரம் பணிமனையில், புதுப்பிக்கப்பட்ட பேருந்துகளையும், பணியாளர்களுக்கான ஓய்வறைகளையும் பார்வையிட்டு, ஆய்வு செய்து பணியாளர்களிடம் குறைகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் கேட்டறிந்தார்கள்.
இக்கூட்டத்தில், மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அ.அன்பு ஆபிரகாம், பொது மேலாளர்கள். கிளை மேலாளர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.