மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள மாசு கட்டுப்பாடு மத்திய வாரியத்தின் சேர்மனாக பணி புரிந்த சிவ்தாஸ் மீனா ஐ.ஏ.எஸ்.அதிகாரியை தமிழக அரசு பணிக்குத் திருப்பி அனுப்பும் வகையில் அவரை விடுவித்துள்ளது மத்திய அரசு. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு கேட்டுக்கொண்டதன் பேரில் சிவ்தாஸ்மீனா மாநில அரசு பணிக்குத் திரும்புகிறார்.
தமிழக அரசின் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலர், கடந்த சில நாட்களாக பல்வேறு துறைகளுக்கும் மாற்றப்பட்டு வருகிறார்கள். இந்த மாற்றத்தில் அதிருப்திகளும் கோட்டையில் அதிகரித்தப்படி இருக்கிறது. இது ஒரு புறமிருக்க , மத்திய அரசு பணியிலுள்ள தமிழக கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சிலரையும் மாநில அரசு பணிக்கு திருப்பி அழைத்துக் கொண்டிருக்கிறது திமுக அரசு.
டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் முதன்மை ரெசிடென்சியல் கமிஷ்னராக இருந்த ஹித்தேஷ் குமார் மக்வானாவை சமீபத்தில் தமிழகத்துக்கு அழைத்துக் கொண்டது தமிழக அரசு. இந்த நிலையில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் பணிபுரிந்த சிவ்தாஸ்மீனாவை தற்போது தமிழகத்துக்கு அழைத்துள்ளனர்.
சிவ்தாஸ்மீனாவை அழைத்து வருவது குறித்து கோட்டையில் பரபரப்பாக பேசிக்கொள்கிறார்கள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள். அவரை இப்போது அழைக்க வேண்டிய அவசியம் என்ன என்பது குறித்தும் விமர்சித்துக் கொள்கின்றனர்.
இதுகுறித்து விசாரித்தபோது, ‘’நிர்வாக வசதிக்காக முக்கிய துறைகளின் உயரதிகாரிகளை தொடர்ச்சியாக மாற்றி வருகிறது திமுக அரசு. இந்தநிலையில், சிவ்தாஸ்மீனாவை விடுவித்துள்ளது மத்திய அரசு. தமிழக உள்துறை அல்லது நகராட்சி நிர்வாகம் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒன்றில் சிவ்தாஸ் மீனா நியமிக்கப்படலாம் ‘’ என்கிறார்கள்.