!["This is a sign that the artist still rules" - Principal M. K. Stalin's speech](http://image.nakkheeran.in/cdn/farfuture/Xc40Zqoq0IV4xiciC_MytHvuY8pYJYVyL-OuTF8JouA/1687260753/sites/default/files/inline-images/we1049.jpg)
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் திமுகவின் முன்னாள் தலைவருமான கலைஞரின் 100வது பிறந்தநாளை திமுகவினர் இந்த வருடம் முழுக்க கொண்டாடி வருகின்றனர். கலைஞரின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று 20ம் தேதி திருவாரூரில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தொடர்ந்து நிகழ்வில் பேசிய தமிழக முதல்வர், ''கலைஞருக்கு திருவாரூரில் கோட்டம் கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது. 'ஓடி வந்த பெண்ணே கேள் நீ தேடிவந்த கோழை உள்ள நாடு இதுவல்ல' என்று 13 வயதில் எந்த திருவாரூர் வீதிகளில் போர் பரணி பாடி வந்தாரோ அதே திருவாரூரில் கலைஞருக்கு கோட்டம் எழுப்பப்பட்டுள்ளது. பேரறிஞர் அண்ணாவை கலைஞர் முதன்முதலாக சந்தித்த ஊர் இந்த திருவாரூர். பின் நாட்களில் தலைவனாக ஆனவர் அல்ல கலைஞர். அவர் தலைவனாகவே பிறந்தவர். அதற்கு அடித்தளமாக அமைந்த ஊர் தான் இந்த திருவாரூர்.
மன்னர்கள் கூட நாங்கள் ஆளும்போது தான் கோட்டமும், கோட்டையும் கட்டுவார்கள். கலைஞர் இன்னமும் வாழ்கிறார். கலைஞர் இன்னமும் ஆள்கிறார் என்பதன் அடையாளமாக தான் இந்த கம்பீரத்தோடு இந்த கோட்டம் அமைந்திருக்கிறது. எனது தாயார் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. என்னை பொறுத்தவரை என் தந்தைக்கு என் தாய் எழுப்பிய அன்பு கோட்டையாகவே நான் இதை கருதுகிறேன். திருவாரூர் தேர் அழகு என்பார்கள்.அதே உருவில் கலைஞர் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த திராவிட மாடல் ஆட்சியை கலைஞருக்கு காணிக்கையாக்குகிறேன்'' என்றார்.