திருவண்ணாமலையில் இன்று 3க்கும் மேற்பட்ட ஸ்கேன் சென்டர்களில் திடீரென சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 20க்கும் மேற்பட்ட ஸ்கேன் சென்டர்கள் இயங்கி வருகின்றன. இந்த ஸ்கேன் சென்டர்களில் சட்ட விதிகளை மீறி கருவில் இருப்பது ஆண் குழந்தையா, பெண் குழந்தையா? என கண்டறிந்து சொல்வது, சட்டவிரோதமாக கருகலைப்பு செய்வது உட்பட தேவையற்ற நிலைகளிலும் பணத்திற்கு ஆசைப்பட்டு ஸ்கேன் செய்ததது போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதுபற்றி, தமிழக சுகாதாரத்துறைக்கு புகார்கள் சென்றும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், மத்திய சுகாதாரத்துறைக்கு புகார்கள் சென்றன. அதனைத்தொடர்ந்து, கடந்த மாதம் மத்திய சுகாதரத்துறை இணைச்செயலாளர் தலைமையில் ஸ்கேன் சென்டர்கள், மருத்துவமனைகளில் ஆய்வுகள் நடத்தப்பட்டன.
அதில் தீபம் ஸ்கேன் சென்டர் உட்பட 3 ஸ்கேன் சென்டர்களுக்கு சீல் வைக்கப்பட்டன. கருகலைப்பில் ஈடுபட்ட மருத்துவர் செல்வாம்மாள் மீது புகார் தரப்பட்டது. அவர் இதுவரை தலைமறைவாக உள்ளார். அவரது புவனேஸ்வரி மருத்துவமனைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இந்நிலையில் திருவண்ணாமலை நகரத்தில் இன்று 7க்கும் மேற்பட்ட ஸ்கேன் சென்டர்களில் ஆய்வு செய்ய சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, இந்திய மருத்துவ கவுன்சிலின் முன்னாள் மாவட்டத்தலைவர் மருத்துவர் அனுராதாவின் எஸ்.எஸ்.மருத்துவமனையில் தற்போது ஆய்வு நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து, மற்ற ஸ்கேன் சென்டர்களிலும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளனர்.
- ராஜா