வருகிற 23 ம்தேதி தான் இந்தியா முழுவதுமே பாராளுமன்றத்திற்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. அதன்பின் தான் எம்.பி.யார்? என தெரிய வரும் ஆனால் அதற்குள் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஒ.பி.ரவீந்திரநாத்குமார் தான் என கல் வெட்டே வைத்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தேனி பாராளுமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் ஒபிஎஸ் மகன் ரவீந்திரநாத்குமாரும், காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவனும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் தங்கதமிழ்செல்வன் உள்பட பலர் போட்டி போட்டனர். மூன்று பேருக்கும் இடையே தான் கடும் போட்டியும் இருந்தது.
அதிலேயும் துணை முதல்வரான ஒபிஎஸ்ஸும் வாக்காள மக்களுக்கு தலைக்கு ஆயிரம் வீதம் ஓட்டுக்கு பண பட்டுவாடா செய்தார். அப்படி இருந்தும் கடந்த 18 ம் தேதி நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்காள மக்கள் எந்த ஆர்வம் இல்லாமல் வாக்களித்தனர். அதைக்கண்டு ஒபிஎஸ் தரப்பு மத்தியில் ஒரு பீதியும் இருந்து வருகிறது. அதோடு கடந்த வாரம் திடீரென 50 ஓட்டு பெட்டிகள் தேனிக்கு வந்து தாலுகா அலுவலகத்தில் இறக்கியது எதிர்கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் கொண்டு வந்த ஓட்டு பெட்டிகளை திரும்ப அனுப்ப சொல்லி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்பின் தேர்தல் ஆணையம் தொகுதியில் உள்ள வடுகபட்டி, பாலசமுத்திரம் பூத்துகளில் மறுவாக்குப்பதிவு நடைபெற இருப்பதையொட்டி தான் அனுப்பி வைத்து இருக்கிறோம் என்று கூறி எதிர் கட்சியினரை சமாதானப்படுத்தினார்கள். அதற்குள் மீண்டும் திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து மீண்டும் 20 வாக்கு பெட்டி மீண்டும் தேனிக்கு வந்ததை கண்டு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதோடு இப்படி தேனிக்கு வந்த ஓட்டு பெட்டிகளை ஒபிஎஸ் தரப்பு மாற்றி வைத்து அதன் மூலம் ஒபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமாரை வெற்றி பெற வைக்க போகிறார்கள் என்ற பேச்சு ஏற்கனவே தேனி தொகுதி முழுவதுமே அரசியல் வட்டாரத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் துணை முதல்வரான ஒபிஎஸ் தொகுதியில் உள்ள குச்சனூர் சிலம்பு சனிஸ்வரன் கோவிலின் அருகே உள்ள தெற்கு பகுதியில் காசி அன்னபூரணி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோவில் கடந்த சில வருடங்களாக ராஜகோபுரத்துடன் கட்டப்பட்டு வந்த நிலையில் கும்பாபிஷேகமும் நேற்று நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேகத்திலேயே வெளிப்படையாக மைக்மூலம் இந்த கோவிலுக்கு பேரூதவி புரிந்த துணை முதல்வர் ஒபிஎஸ். தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஒ.பி.ரவீந்திரநாத்குமார் மற்றும் ஒ.பி.ஜெயபிரதீப் குமார் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து இருக்கிறார்கள். அதைவிடகொடுமை என்ன வென்றால் உடனடியாக கோவில் சுவற்றில் வைக்கப்பட்ட கல் வெட்டில் "குச்சனூர் காசி ஸ்ரீ அன்னபூரணி ஆலயத்திற்கு பேரூதவிபுரிந்தவர் இதய தெய்வம் மாண்புமிகு அம்மா செல்வி ஜெ.ஜெயலலிதா தமிழ்நாடு முதலமைச்சர்". என்றும் மற்றொரு கல்வெட்டில்" குச்சனூர் ஸ்ரீ அன்னபூரணி ஆலயத்திற்கு பேரூதவிபுரிந்தவர் துணை முதல்வர் ஒபிஎஸ். தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஒபி. ரவீந்திரநாத்குமார் மதிப்பிற்குரிய ஒபிஜெயபிரதீப்குமார்" என்று கோல்டு கலரில் பாதிக்கப்பட்டிருந்தது. அதற்கு கீழ் 16.5.2019 என தேதியும் போட்டு வைத்துள்ளனர்.
ஆனால் தேர்தல் முடிந்து ஓட்டு எண்ணிக்கை வருகிற 23 ம்தேதி நடைபெற இருக்கிறது. அப்பொழுது தான் தேனி பாராளுமன்ற உறுப்பினர் யார்? என எல்லோருக்கும் தெரிய வரும் அப்படி இருக்கும் போது ஒபிஎஸ் காசி ஸ்ரீ அன்னபூரணி கோவிலுக்கு பணம் உதவி செய்தார் என்பதற்காக கோவில் நிர்வாகிகள் தேர்தல் விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு விட்டு ஒ.பி.ரவீந்திரநாத்குமாரை தேனி பாராளுமன்ற உறுப்பினர் என்று எப்படி போடலாம், பணத்திற்காக எம்.பி.ஆவதற்கு முன்பே ஒ.பி.ரவீந்திரநாத்குமார் எம்.பி.ஆகிவிட்டார் என்று போட்டு ஒபிஎஸ் தரப்புக்கு ஜால்ரா போட்டு கொண்டு தேர்தல் விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு விட்டார்கள் இருந்தாலும் இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான பல்லவி பல்தேவ் அதிரடி நடவடிக்கை எடுத்து அந்த கல்வெட்டில் இருக்க கூடிய "தேனி பாராளுமன்ற உறுப்பினர்" எழுத்தை மட்டும் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என தொகுதி மக்கள் மத்தியில் பேசப்பட்டும் வருகிறது.