R15, KTM போன்ற காஸ்ட்லியான பைக்குகள் மட்டுமே திருடும் இளைஞர்களின் கதையைக் கேட்டுக் கிறுகிறுத்துப் போயுள்ளனர் தனிப்படை போலீசார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு சிவகங்கை மாவட்டத்தில் அடுத்தடுத்து விலை உயர்ந்த பைக்குகள் திருடுபோன நிலையில், பள்ளத்தூர் காவல் நிலையத்தில் பதிவான புகாரை வைத்துக்கொண்டு சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியபோது எல்லாமே 25 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களின் செயல் என்பதை அறிந்தனர்.
சிவகங்கை மாவட்டத்தில் காணாமல் போன சில பைக்குகள், புதுக்கோட்டை மாவட்டத்தில் விற்பனை செய்யப்பட்டிருப்பதைத் தெரிந்து கொண்ட தனிப்படை போலீசார், சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமத்தில் விநாயகம்பட்டி சீனி மகன் சரவணன் (25) என்பவரைத் தூக்கியதுடன் அவரிடம் இருந்த ஒரு பைக்கையும் கைப்பற்றிக் கொண்டு தாங்கள் வந்த டெம்போ டிராவலர் வேனில் வைத்தே சரவணனை கவனித்து விசாரிக்க அடுத்த சில பெயர்களைச் சொன்னார்.
திருநாளூர் தெற்கு அக்ரஹாரம் துரைராஜன் மகன் முல்லைவேந்தன் (19) தூக்கப்பட்டு அவர் விற்ற பைக்கை கீரமங்கலம் சிவன் கோயில் அருகே கொண்டு வரச் செய்து பறிமுதல் செய்தனர். இவர்கள் சொன்ன தகவலின் பேரில் கீரமங்கலம் திருவள்ளுவர் மன்றம் சீனிவாசன் மகன் கபிலன் (19) என்பவரையும் தூக்கி அவர் விற்ற பைக்குகள் என 4 விலை உயர்ந்த பைக்குகளையும் மீட்டு ஒரு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு 3 பேரையும் சிவகங்கை தூக்கிச் சென்றனர்.
அங்கு தனியறை விசாரணையில், “நாங்கள் பள்ளியில் படிக்கும்போதே சில முன்னாள் மாணவர்களால் கஞ்சா போதைக்கு அடிமையாகி சில மாதங்கள் போதை கிரக்கம் குறையாமல் இருந்த எங்களிடம், நாங்க சொல்ற இடத்துக்கு நாங்க தரும் பண்டல்களை நீங்க கொண்டு போய் கொடுத்தால் உங்களுக்கு கஞ்சாவும் கிடைக்கும் கூட ஒரு ட்ரிப்புக்கு ரூ.10 ஆயிரம் பணமும் கிடைக்கும்னு சொன்னாங்க.
கஞ்சா எங்களை ஆட்கொண்டிருந்ததால் சரி என்றோம். வெளியூருக்கு கஞ்சா கொண்டு போகணும் அதுக்கு காஸ்ட்லியான பைக் வேணும். நீங்க விலை கொடுத்து வாங்க முடியாது. அதனால எங்கேயாவது நல்ல பைக்குகளா திருடி வந்துடுங்க என்று சொன்னார்கள். இதற்காக நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பைக் திருடி வந்தோம். முழு கொரோனா நேரத்தில் கொடைக்கானல் வரை ஒரு பைக்ல 2 பேர் எனப் பல பைக்குகள்ல கஞ்சா பண்டல்களை கொண்டு போய் அவங்க சொல்ற ஆட்களிடம் கொடுத்ததும் பணம் கொடுத்தாங்க புகைக்க கஞ்சாவும் கிடைத்தது.
ஒரே ரூட்ல 2 முறைக்கு மேல ஒரே பைக்ல போனால் செக்போஸ்ட்ல சந்தேகம் வரும்னு அந்த பைக்குகளை கீரமங்கலத்தில் ஒரு பழைய இரும்பு கடையில வித்துடுவோம். (நாகை மாவட்டத்தில் திருடி புதுக்கோட்டை மாவட்டத்தில் விற்பனை) இப்படியே ஏராளமான பைக்குகளை எங்க டீம் திருடி விற்றோம். எந்த மாவட்டத்தில் திருடினோமோ அதே மாவட்டத்தில் விற்கமாட்டோம். அடுத்த மாவட்டத்தில் விற்றால்தான் சீக்கிரம் கண்டுபிடிக்க முடியாது. போன வருசம் ஒரு பையன் பைக் விபத்தில் இறந்தது கூட திருக்கோவிலூர்ல திருடின பைக்தான்.
நாங்க இப்படி புதுப்புது காஸ்ட்லி பைக்ல சுத்துறதைப் பார்த்து பசங்க நிறையப் பேர் பைக் வேணும்னு கேட்டாங்க. அதனாலதான் சிவகங்கை, திருப்பூர், கோவை, புதுக்கோட்டை என்று பல மாவட்டங்களிலும் R15, KTM போன்ற காஸ்ட்லியான பைக்குகள் திருடி வந்து குறைந்த விலைக்கு வித்துடுவோம். இந்த பைக்குக்கு 10 ரூபாய் பைக் என்று கூட பேரு வச்சிருக்காங்க. எங்க டீம்ல நிறைய பேர் இருக்காங்க. எல்லாருமே கஞ்சா அடிமையால இப்படி ஆனவங்கதான். பைக் விற்கும் பணத்தில் சில நாளைக்கு கடைகள்ல நல்லா சாப்புடுவோம் அவ்வளவுதான்” இதைக் கேட்டு அசந்து போய் நின்றுள்ளனர் போலீசார்.
இவர்கள் இதுவரை பலமுறை சிறைக்கு போய் வந்துவிட்டதால் அடுத்தடுத்து தொடர்ந்து சங்கிலி பறிப்பிலும் இறங்கியுள்ளனர். ஆனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் இவர்களால் விற்கப்பட்ட ஏராளமான பைக்குகள் சுற்றி வருவதாக கூறியுள்ளனர்.