அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளார். அதேசமயம் அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாக அவர் முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பிறகு நீதிமன்றத்தின் அனுமதியோடு காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மருத்துவக்குழு கண்காணிப்பில் உள்ளார்.
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு பின்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செந்தில் பாலாஜிக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்றுடன் 14 நாட்கள் நீதிமன்றக் காவல் முடிவடைந்த நிலையில் கடந்த 28 ஆம் தேதி மருத்துவமனையில் இருந்தபடியே செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு காணொளியில் ஆஜரானர்.
அதேநேரம் செந்தில் பாலாஜி சட்டவிரோதக் காவலில் இருப்பதாக அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனுவை நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில் நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு நாளை காலை 10.30 மணிக்கு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.