வடகிழக்கு பருவமழையின் காரணமாக உருவான மிக்ஜாம் புயல் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நிவாரணப்பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. வடகிழக்கு பருவமழையையொட்டி வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயலின் தாக்கத்தினால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை அத்தியாவசிய பொருள்கள் கிடைக்க இயலாத சூழ்நிலை உருவாகியுள்ளது.
தமிழக அரசு இயல்புநிலை திரும்ப பல்வேறு துரித நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு அறிவுறுத்தியதன் அடிப்படையில், கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ள பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகள் கருதி 1081 கிலோ கிராம் பால்பவுடர், 21,550 பிரெட் பாக்கெட்டுகளும், 16,784 ரொட்டி பாக்கெட்டுகளும், 33,508 குடிநீர் பாட்டில்களும், 150 ஜாம் மற்றும் பண் பாக்கெட்டுகளும் அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் மெழுகுவர்த்திகள், தீப்பெட்டிகள், போர்வைகள் மற்றும் துணிமனிகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் கனமழையால் பல்வேறு இடங்களில் நீர் தேங்கியுள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நீரை வெளியேற்றுவதற்கு 10 எச் பி மோட்டார் இன்ஜின் 10ம், ஒரு 40 எச்பி மோட்டார் இன்ஜினும் மேலும் மேற்பார்வையாளர், தொழில்நுட்ப உதவியாளர், இன்ஜின் இயக்குபவர் என 10 பணியாளர்கள் நீரை அகற்றும் பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்திலிருந்து மின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட 190 நபர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் மீட்பு பணிகள் மேற்கொள்ள கடலூர் மாவட்டத்திலிருந்து நான்கு படகுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் உடன் இருந்தனர்.