Skip to main content

“ஈரோட்டில் தொழில்நுட்ப பூங்கா அமைக்க இடம் தேர்வு” - அமைச்சர் முத்துசாமி

Published on 25/03/2023 | Edited on 25/03/2023

 

"Selection of a place to set up a technology park in Erode." - Minister Muthuswamy

 

ஈரோடு மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் அனைத்து திருமண நிதி உதவித் திட்டத்தின் கீழ் தாலிக்கு தங்கம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டங்களின் கீழ் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது. விழாவிற்கு ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார்.  அமைச்சர் சு.முத்துசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். 

 

அதனைத் தொடர்ந்து அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மாணவிகளுக்கான 1000 ரூபாய் வழங்கும் திட்டம் இன்று 2-வது கட்டமாக 2,169 மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒருமுறை வழங்கப்பட்டதை சேர்த்து 6,310 பேருக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ளது. 

 

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் முழு அளவில் பணிகள் நிறைவடைந்து விட்டது. 6 பம்பிங் ஸ்டேஷனுக்கு தண்ணீர் ஏற்றி குளங்களுக்கு அனுப்பும் பரிசோதனை நிறைவு பெற்றது. 6-வது பம்பிங் ஸ்டேஷனிலிருந்து அடுத்து வரும் 18 கிலோமீட்டர் பிரதான குழாயில் பரிசோதனை நிறைவடைந்துவிட்டது. சில இடங்களில் மட்டும் சின்ன சின்ன குறைபாடுகள் உள்ளன. அதை சரி செய்து வருகிறோம். 1,048 குளங்களுக்கும் தண்ணீர் செல்வதை உறுதிப்படுத்தி உள்ளோம். சில இடங்களில் மட்டும் நீதிமன்றங்களில் வழக்குகள் உள்ளதால் அந்த இடங்களுக்கான பணிகள் மட்டும் தாமதம் ஆகிறது. அதனால் பிரதான பணிகளுக்கு எதுவும் பாதிப்பு இல்லை. அந்த இடங்களிலும் நீதிமன்ற வழிகாட்டுதல்படி முக்கிய பணிகளை நிறைவு செய்துவிட்டோம். முழு பணிகள் நிறைவடைந்த உடன் முதலமைச்சரிடம் இது குறித்துப் பேசி அனுமதி கேட்டு திறப்பு தேதி பின்னர் அறிவிக்கப்படும். 

 

ஈரோடு மாவட்டத்தில் தொழில்நுட்ப பூங்கா சித்தோடு அருகே ஐ.ஆர்.டி.டி கல்லூரி வளாகத்தில் தொடங்குவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கீழ்பவானி கான்க்ரீட் திட்ட எதிர்ப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தோம். மேலும் 4 நாள் அவகாசம் அளிக்கப்பட்டது. ஆனாலும் அவர்கள் அந்தத் திட்டத்தை இப்போதும் எதிர்க்கிறார்கள். அதில் ஒரு சிலர் மட்டும் சில பணிகளை மேற்கொள்ளலாம் என்று சொல்லி உள்ளனர். இதற்கிடையே இது சம்பந்தமாக வரும் 28 ஆம் தேதி நீதிமன்ற தீர்ப்பு வர உள்ளது. அந்த தீர்ப்பை பார்த்து அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


 

சார்ந்த செய்திகள்