![Seaman who named the baby boy as a girl name](http://image.nakkheeran.in/cdn/farfuture/9oFpx8v3Qy5hfDJdD1EVdp2VwP_gYi7OCEhcdPWCZJA/1686651937/sites/default/files/inline-images/th-2_1508.jpg)
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை அடுத்து காஞ்சிபுரத்தைச் சுற்றியுள்ள பரந்தூர், ஏகனாபுரம், நெல்வாய் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கிய பகுதியில் 2வது பசுமை விமான நிலையம் அமைக்கப்பட உள்ளதாக மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன. இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும், இதற்கு நாம் தமிழர் கட்சி சார்பில் எதிர்ப்பு தெரிவித்து, காஞ்சிபுரத்தில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதையடுத்து, இந்தப் பொதுக் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிராகக் கண்டன உரையாற்றினார். அப்போது, அந்த பொதுக்கூட்டத்தில் சோழவரத்தைச் சேர்ந்த அக்கட்சி நிர்வாகியான இன்பசேகரன் - தங்கப்பெண் தம்பதியினர், மேடைக்கு தங்களுடைய ஆண் குழந்தையைக் கொண்டு வந்து அந்த குழந்தைக்கு பெயர் வைக்கும்படி சீமானிடம் கேட்டுக்கொண்டனர். இதற்கிடையில், அந்த குழந்தை பூ வைத்து இருந்ததால் குழம்பிப் போன சீமான், இந்த அன்பு செல்வத்துக்கு வெண்ணிலா எனப் பெயர் வைக்கிறேன்” எனப் பகீரென கூறினார்.
![Seaman who named the baby boy as a girl name](http://image.nakkheeran.in/cdn/farfuture/ciEnwqrboE3b4O25N4FuyflxDTGkDnbxfJaxEYlHlXo/1686651961/sites/default/files/inline-images/th-1_4038.jpg)
ஒருகணம் இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தம்பதி, ‘என்னங்க இது.. ஆம்பள குழந்தைக்கு அண்ணே வெண்ணிலா என பெயர் வெச்சிட்டாரே’ என நினைத்துக்கொண்டு, சீமான் காதருகே சென்று, “அண்ணே இது ஆம்பள குழந்தை அண்ணே” எனக் கூறியுள்ளார். அதன்பிறகு, சுதாரித்துக்கொண்ட சீமான், “பொண்ணா பையனானே சொல்லமாட்றாங்க.” என சிரித்துக்கொண்டு, அந்த குழந்தைக்கு வெற்றிவேந்தன் என பெயர் சூட்டினார். தற்போது, இது இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
- சிவாஜி