
சேலத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஒன்றில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தமிழ் ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சேலம் மாவட்டம் சேலத்தம்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றி வந்தவர் சுரேஷ் பாபு. இவர் பள்ளி மாணவிகள் இயற்கை உபாதை கழிக்கும் இடத்திற்குச் சென்று தவறாக சைகை காட்டியதாகவும், மாணவர்கள் சிலரை அழைத்து கால்களைப் பிடித்து பணிவிடை செய்யுமாறும் கட்டாயப்படுத்தியதாகவும் புகார் எழுந்தது. இதுகுறித்து பெற்றோர்கள் பள்ளிக்குச் சென்று ஆசிரியர் சுரேஷ் பாபுவை சிறை பிடித்தனர். அதன்பிறகு போலீசாருக்குத் தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், பள்ளிக்கு வந்த போலீசார் தமிழ் ஆசிரியர் சுரேஷ் பாபுவை கைது செய்து அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.