தடுப்பு கட்டையின் மீது மோதி அதிவேகமாக சென்ற தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பள்ளி மாணவ-மாணவிகள் காயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சம்பவம் கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தாகம் தீர்த்தாபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் வெல்டன் என்ற தனியார் பள்ளி பேருந்து சுமார் 33 பள்ளி மாணவர்களை ஏற்றுக்கொண்டு நயினார் பாளையம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இந்தத் தனியார் பள்ளி பேருந்து சின்னசேலம் அருகே குரால் கைகாட்டி பகுதியில் விருத்தாசலம் - சேலம் சாலையில் வாகனங்கள் மெதுவாக செல்வதற்காக வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்பு கட்டை மீது தனியார் பள்ளி பேருந்து மோதி பேருந்து கவிழ்ந்தது.
விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 15 மாணவ மாணவிகள் காயங்களுடன் சின்னசேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதில் படுகாயங்கள் அடைந்த ஐந்து மாணவ மாணவிகள் மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு சிகிச்சையானது அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் பள்ளி மாணவ மாணவிகளை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் நேரில் சந்தித்து அவர்களின் உடல்நலம் குறித்துக் கேட்டறிந்து தொடர்ந்து அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை விபரங்களையும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
தமிழ்நாடு அரசின் சார்பில் சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், அரசின் விதிமுறைகளை மீறி செயல்பட்ட இந்தத் தனியார் பள்ளியின் மீது பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.