புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் உருவம்பட்டி கிராமத்தில் 17 வருடங்களுக்கு முன்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கடந்த சில ஆண்டுகளாக பள்ளியின் சிறப்புகளைப் பார்த்து பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்த்து வருகின்றனர். பள்ளி மீது பெற்றோர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி மாணவர்களின் தனித் திறன்களை வெளிக் கொண்டு வருகிறார்கள் தலைமை ஆசிரியை சாந்தி தலைமையிலான சக ஆசிரியர்கள். பெற்றோர்களுக்கும் சிறப்பு செய்யப்படுவதுடன் ஒவ்வொரு மாதமும் பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தான் பள்ளி தொடங்கிய காலத்தில் இருந்து இதுவரை ஆண்டுவிழா நடத்தப்படவில்லை. பக்கத்து கிராம பள்ளிகளில் எல்லாம் ஆண்டுவிழா நடக்கும் போது எங்கள் குழந்தைகள் ஏங்கி தவிக்கின்றனர். அதனால் இந்த வருடம் ஆண்டுவிழா நடத்த வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர். ஆசிரியர்களும் ஆண்டு விழாவுக்கான ஏற்பாடுகளை செய்ததுடன் தற்போது படிக்கும் மாணவர்களை மட்டுமின்றி முன்னாள் மாணவர்களுக்கு கலை நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டு பயிற்சி கொடுத்தனர்.
திங்கள் கிழமை முதல் ஆண்டுவிழா என்பதால் கிராமமே மின் விளக்குகளால தோரணம் கட்டி ஜொலித்தது. மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் தொடங்கியது பக்கத்து கிராம இளைஞர்களும் கலந்து கொண்டனர். சில பாடல்களும் அதற்கான ஆட்டமும் மக்களை கவர்ந்த நிலையில் அம்மன் பாடலுக்கு மேடையில் மாணவ, மாணவிகள் நடனமாடிக் கொண்டிருக்க மேடைக்கு முன்னால் கீழே சில மாணவிகள் தீ சட்டியுடன் வர முன்னாள் மாணவி ஒருவர் மாலை அணிந்து கொண்டு அம்மன் வேடமணிந்து சூலாயுதத்துடன் ஆடிக் கொண்டு வர இதைப் பார்த்து பக்தி பரவசத்துடன் அங்கு திரண்டிருந்த பெண்கள் ஒவ்வொருவராக எழுந்து சாமி ஆடத் தொடங்கிவிட்டனர். அந்தப் பாடல் முடியும் போது கூட்டத்தில் 10- க்கும் மேற்பட்டவர்கள் சாமியாடிக் கொண்டிருந்தனர். அதே போல மாணவர்களின் கருப்பசாமி பாடலுக்காக நடனத்தின் போது கூட்டத்தில் இருந்த ஆண்கள் பலர் சாமியாடத் தொடங்கிவிட்டனர்.
மாணவ, மாணவிகளின் முதல் ஆண்டுவிழா நடனம் மொத்த கிராம மக்களையும் ஆட்டிவைத்துவிட்டதை பார்த்து அங்கே வந்திருந்த அதிகாரிகளும், குவிந்திருந்த கிராம மக்களும் விழா ஏற்பாடுகள் செய்திருந்த ஆசிரியர்களையும், விழாக்குழுவினரையும், மாணவர்களையும் பாராட்டினார்கள். ஆண்டுவிழா காண வந்த அனைவருக்கும் மரக்கன்றுகள் பரிசும் வழங்கப்பட்டது.