
சமூக வலைதளங்களில் வைகோவை பற்றி மீம்ஸ் போடுபவர்கள் ஒரு நாள் வைகோவாக வாழ்ந்து காட்டுங்கள் என்று நடிகர் சத்யராஜ் பேசினார்.
ஈரோடு மாவட்டம், மூலக்கரையில் மதிமுகவின் முப்பெரும் விழா மற்றும் மாநில மாநாடு சனிக்கிழமை நடைப்பெற்றது. இதில் திமுக பொருளாளர் துரைமுருகன், நடிகர் சத்யராஜ், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் சத்யராஜ், வைகோ அண்ணனை பற்றி மீம்ஸ் போடுகிறவர்களிடம் நான் ஒன்று சொல்லுகிறேன். ஒரே ஒரு நாள் வைகோவாக வாழ்ந்து பாருங்கள். 19 மாதம் வேலூர் சிறைக்கு போயிட்டு வந்து மீம்ஸ் போடுங்கள். போய் இருந்து பாருங்கள்.
யார் முதல் அமைச்சராக வரட்டும், பிரதமராக வரட்டும். நீங்கள் (வைகோ) சில பொருளாதார ரீதியிலான நல்ல திட்டங்களை, சட்டங்களை ரகசியமாகவாவது அந்த முதல் அமைச்சரிடமும், பிரதமரிடமும் கொடுங்கள். அவர்கள் அதனை வைத்து பேர் வாங்கிக்கொள்ளட்டும்.
ஏன் என்றால் அவ்வளவு தெளிவான சித்தாந்தம் கொண்டவர் அண்ணன் வைகோ. வைகோ அண்ணனை இந்த சமூகம் நல்லப்படியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று இந்த சமூகத்தை பார்த்து கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு பேசினார்.