தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி போஸ் நகரை சேர்ந்தவர் ரவுடி மாணிக்கராஜா. இவன் மீது கொலை வழக்குகள் உட்பட பல அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவனைத் தேடி இன்று மாலை சுமார் 6 மணிக்கு மேல் கோவில்பட்டியில் கிழக்கு பகுதி காவல்நிலைய எஸ்ஐ இசக்கி ராஜா மற்றும் காவலர்களான செல்வகுமார், முகமது மைதீன் ஆகிய மூவரும் போஸ் நகர் சென்றுள்ளனர்.
ஆனால் மாணிக்கராஜா அங்கு இல்லை அவன் கார்த்திகைபட்டியில் இருப்பதாக தெரியவந்தது. அங்கே சென்ற போலீசார் அவனை பிடிக்க முற்பட்டனர். அப்போது போலீசாருக்கும் ரவுடிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஏற்பட்ட வாக்குவாதத்தில் காவலர்களை அரிவாளால் வெட்டி தாக்கியிருக்கிறான் மணிக்கராஜா.
இதில் 2 காவலர்கள் காயமடைந்தனர். வெட்டி விட்டு ஓடிய மாணிக்கராஜாவின் மீது இசக்கிராஜா தன் துப்பாக்கியால் காலில் சுட்டார். இதனால் காயம் அடைந்த மாணிக்கராஜா பிடிபட்டான். மாணிக்கராஜா மற்றும் காயமடைந்த காவலர்கள் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அங்கு அவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்பு மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளான். இது தொடர்பாக கிழக்கு பகுதி காவல்நிலைய ஆய்வாளர் சுதர்சன் விசாரணை நடத்தி வருகிறார். நேற்று விழுப்புரம் ரவுடி மணிகண்டன் என்கவுன்டரில் கொல்லப்பட்ட நிலையில் தூத்துகுடியில் ரவுடி மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.