சென்னை தியாகராயர் நகரில் உள்ள சசிகலா இல்லத்திற்குச் சென்ற அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், அவரது மனைவி ராதிகா சரத்குமார் இருவரும் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினர். அதைத் தொடர்ந்து, சசிகலாவை சந்தித்துப் பேசினர்.
சசிகலாவுடனான சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சரத்குமார், "சசிகலாவின் உடல்நிலைப் பற்றி விசாரிக்க மரியாதை நிமித்தமாகச் சந்தித்தோம். சசிகலாவுடன் குடும்பம் போல் பழகியதால் நன்றி மறவாமல் சந்தித்தேன். 10 ஆண்டு காலமாக சசிகலாவை எனக்குத் தெரியும். கூடுதல் சீட் தரும் கட்சிகளுடன் கூட்டணி எனக் கூறவில்லை" எனத் தெரிவித்தார்.
தற்போது அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வரும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், சசிகலாவை சந்தித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.