பிப் 28 அன்று மாலை தன் மகள் தள்ளாடிக் கொண்டு வருவதைப் பார்த்த அவரது தந்தைக்கு அச்சம், பதைபதைப்பு. காரணம் விபரம் புரியாத வயது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பள்ளி ஒன்றில் படிக்கும் மாணவி அவள். பெரிய வகுப்பை எல்லாம் தாண்ட வில்லை. (மாணவிகளின் எதிர்காலம் கருதி பெயர் மற்றும் இதர அடையாளங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது) வெகுநேரம் கழித்து விசாரித்த தந்தையிடம், சக மாணவிகளுடன் சென்ற தன்னை அவர்களுக்கு வேண்டியவர் தங்களைக் காரில் ஏற்றிக் கொண்டு சென்றார்.
குடிப்பதற்கு ஏதோ கொடுத்தார், சினிமாவிற்குப் போனோம் என்று அவள் சொல்ல பதறிப்போன தந்தை, அவள் செல்லை வாங்கி அலசியிருக்கிறார். அதில் சந்தேகத்திற்கிடமான நம்பர் கிடைக்கவே, மறுநாள் அந்த நம்பரில் அவளையே பேச சொல்லி, ஒரு இடத்திற்குத் தந்திரமாக வரவழைத்திருக்கிறார். நம்பிய அவனும் அதே காரில் வந்திருக்கிறான்.
![SANKARANKOVIL SCHOOLS STUDENTS DRINKS DRIVER ARRESTED POLICE](http://image.nakkheeran.in/cdn/farfuture/0jifBn8p-QlSGhIZFC_vAwAhcsmB4aHPsDE4lx2BQmI/1583055853/sites/default/files/inline-images/P2_0.jpg)
தனது உறவினர்களுடன் காத்திருந்த அந்த தந்தை அவன் வந்ததும் அடையாளம் தெரிந்து ஆத்திரத்தில் அவர் அடிக்க, மற்றவர்களும் சேர்ந்து அடிகொடுத்துள்ளனர். அவன் வந்த காரையும் மடக்கி வைத்தனர். தகவலறிந்து ஸ்பாட்டுக்கு வந்த சங்கரன்கோவில் டவுண் போலீசார் அவனையும், அவன் வந்த காரையும் கைப்பற்றி காவல்நிலையம் கொண்டு சென்றனர். இந்த விஷயமறிந்து பாதிக்கப்பட்ட மற்ற மாணவிகளின் பெற்றோர்களும் ஸ்டேஷனில் கூடி விட்டனர்.
![SANKARANKOVIL SCHOOLS STUDENTS DRINKS DRIVER ARRESTED POLICE](http://image.nakkheeran.in/cdn/farfuture/1k4mF6uk-O7e0xGhE38twj77y3yY0X7z3bFCwxBP5y8/1583055871/sites/default/files/inline-images/P3.jpg)
இதனிடைய பிடிபட்டவன் சேதுராஜ் என்றும், தனது ஊரிலுள்ள ஒருவரின் கார் டிரைவராக வேலை செய்பவர் என்றும் அந்தக் காரைத்தான், தன் முதலாளிக்குத் தெரியாமல் பயன்படுத்தியிருக்கிறார் என்று போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. மேலும் அவரது மொபைல் போனை வாங்கிய போலீசார் அதை ஆராய்ந்த போது. மாறுபட்ட படங்களோ, மாணவிகள் தொடர்பான படங்களோ பதிவாக்கப்படவில்லை என்பதை அறிந்து கொண்டனர்.
விசாரணையில், நான், அவர்களுக்கு ட்ரிங்ஸ் கொடுத்து தியேட்டரில் விட்டுவிட்டுதான் வந்தேன். வேறு செயல்களில் ஈடுபடவில்லை. நீங்களே அந்தப் பிள்ளைகளிடம் கேட்டுப் பாருங்கள் என்று சொல்லியிருக்கிறான்.
![SANKARANKOVIL SCHOOLS STUDENTS DRINKS DRIVER ARRESTED POLICE](http://image.nakkheeran.in/cdn/farfuture/6L-VpEjhYuvB-9h65B3_AmpIK3D7AhPptuoh5nyWSxM/1583055888/sites/default/files/inline-images/P4.jpg)
விசாரணையில் தனக்கு வேண்டிய ஒரு மாணவியோடு வந்த அவளது வகுப்பின் சக மாணவிகள் மூவரையும் காரில் ஏற்றிக் கொண்டு தனி இடத்திற்குப் போயிருக்கிறார்கள். அவன் வாங்கி வந்தது பீர், மது என்று அந்த மாணவிகளுக்கும் தெரியுமாம். அவர்கள் அனைவரும் ஒன்றாகவே பீர் அருந்தியிருக்கிறார்கள். பின்பு அவர்களை நகரின் ஒரு சினிமா தியேட்டரில் மதியக்காட்சி பார்க்க விட்டு விட்டு காட்சி முடிந்த பின்பு வந்து அவர்களைக் காரில் பிக்-அப் செய்து கொண்டு போனவன் வழியில் டிராப் செய்து விட்டுப் போயிருக்கிறான். அந்த நேரத்தில் வீடு திரும்பிய அந்த மாணவியின் தந்தை சந்தேகப்பட்டு மறுநாள் பொரிவைத்துப் பிடித்திருக்கிறார். இதில் வேறு யாரும் சம்பந்தப்பட்டுள்ளார்களா என்றும் விசாரணை நடக்கிறது.
![SANKARANKOVIL SCHOOLS STUDENTS DRINKS DRIVER ARRESTED POLICE](http://image.nakkheeran.in/cdn/farfuture/yZ0dHZYYxtZceYIDKitfZS6LfOMVO3AIIFU1TFDGYnI/1583055900/sites/default/files/inline-images/P5.jpg)
அவரை விசாரித்ததில் பிள்ளைகளுக்கு அது மது வகையான பீர் என்றும் தெரிந்திருக்கிறது. எல்லோரும் ஒன்றாகத்தானிருந்து சாப்பிட்டிருக்கிறார்கள். என்றாலும் அறியாத மாணவிகளுக்கு போதை பொருளைக் கொடுத்தது குற்றம் தான். போக்சோ பிரிவிலும் இது அடங்கும் வழக்குப் பதிவு செய்யப்படும் என்கிறார் ஆய்வாளரான சத்தியப்பிரபா. நடந்த இந்தக் கொடுமை பெற்றோர்களுக்கு விடப்பட்ட எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.