சேலம் அருகே, ரயில்வே மேம்பாலத்தின் கீழே கிடந்த பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே உள்ள ராமமூர்த்தி நகர் ரயில்வே மேம்பாலத்திற்கு அடியில், ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 17) 50 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஓமலூர் டி.எஸ்.பி சங்கீதா, தீவட்டிப்பட்டி காவல்நிலைய காவல் ஆய்வாளர் ஆனந்த்குமார் மற்றும் காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்தனர். சடலத்தைக் கைப்பற்றிய காவல்துறையினர், உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதல்கட்ட விசாரணையில், சடலமாகக் கிடந்த பெண்ணை மர்ம நபர்கள் வேறு எங்கோ ஓரிடத்தில் வைத்து அடித்துக் கொலை செய்துவிட்டு, ரயில்வே மேம்பாலத்திற்குக் கீழே கொண்டு வந்து போட்டுவிட்டுச் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. சடலமாகக் கிடந்த பெண்ணின் கழுத்தில் தங்க சங்கிலி இருந்தது. வயிற்றில் ரத்தக்காயம் உள்ளது. இடக்கையில் மணிமலர் என்று பச்சைக் குத்தப்பட்டு இருந்தது. பச்சை குத்தப்பட்ட பெயர்தான், கொலையுண்ட பெண்ணின் உண்மையான பெயரா? அல்லது அவருடைய தாயார் பெயரா? எனத் தெரியவில்லை. கழுத்தில் தங்கச்சங்கிலி இருந்ததால் நகைக்காக இந்தக் கொலை நடந்திருக்காது எனக் கருதப்படுகிறது. பாலியல் தொடர்பால் கொலை நடந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
எனினும், சடலமாகக் கிடந்த பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற முழுமையான பின்னணி விவரங்கள் தெரியவில்லை. சடலம் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் பொருத்தப்பட்டு உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும், தீவட்டிப்பட்டி, ஓமலூர் மற்றும் தர்மபுரி பகுதிகளில் சடலத்தின் புகைப்படத்தைக் காட்டியும் விசாரித்து வருகின்றனர். சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் காணாமல் போன பெண்களின் விவரங்களை சேகரித்து, அதன் அடிப்படையிலும் விசாரணை நடந்து வருகிறது.