Skip to main content

சேலத்தில் பெண்களை ஆபாசப்படம் எடுத்து பாலியல் வன்புணர்வு!; ஆளும் தரப்புக்காக மூடி மறைக்கிறதா காவல்துறை? 

Published on 29/03/2019 | Edited on 29/03/2019

 

சேலத்தில், காதலர்களுடன் தனிமையில் வரும் இளம்பெண்களை மிரட்டி ஆபாசப்படம் எடுத்து, அவர்களை பாலியல் வன்புணர்வு செய்து வந்த கும்பலைச் சேர்ந்த முக்கிய குற்றவாளிகளை காவலில் எடுத்து விசாரிக்க சேலம் மாநகர காவல்துறை முடிவு செய்துள்ளது.

k


ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்தவர் இளவரசி (25). பெங்களூருவில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய உறவினர், மூர்த்தி. சேலம் அஸ்தம்பட்டியில் வசிக்கிறார். (பெண் மற்றும் உறவினர் ஆகிய இருவரின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன).


கடந்த 22.3.2019ம் தேதி சேலம் வந்திருந்த இளவரசி, மூர்த்தியை சந்தித்துப் பேசியுள்ளார். பின்னர் அவர்கள் இருவரும் அன்று இரவு, சேலத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் பவானிக்கு சென்று கொண்டிருந்தனர். மூர்த்தி, மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றார்.


சேலம் கொண்டலாம்பட்டி அருகே, கோவை பிரதான சாலையில் பட்டர்பிளை மேம்பாலம் அருகே சென்றபோது, பாலத்துக்கு அடியில் இருட்டுப் பகுதியில் மறைந்து இருந்த ஒரு கும்பல், அவர்களை வழிமறித்தது. அந்த கும்பல் கத்தி முனையில், இளவரசி அணிந்திருந்த நான்கரை பவுன் நகைகளை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டது. 


இதுகுறித்து இளவரசி அளித்த புகாரின்பேரில் கொண்டலாம்பட்டி காவல்துறையினர், கொண்டலாம்பட்டி புத்தூரைச் சேர்ந்த மணிகண்டன் (21), அவருடைய கூட்டாளிகள் சுபாஷ் (27), இளங்கோ (28), தினேஷ் (27) ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். அந்த கும்பலிடம் இருந்து 40 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.


இதற்கிடையே, பிடிபட்ட கும்பல் மேலும் பல பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டதும், அவர்களை செல்போனில் ஆபாசப்படம் எடுத்து மிரட்டி, பலமுறை பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் தொடர்ந்து வெளியாகின. எனினும், இதுகுறித்து காவல்துறையினர் வெளிப்படையாக பேசாமல் தொடர்ந்து கள்ள மவுனம் காத்து வருகின்றனர்.


இந்நிலையில் காவல்துறையில் உள்ள நம் சோர்ஸ்கள் சிலரிடம் பேசினோம்.


பிடிபட்டவர்களில் மணிகண்டனும், சுபாஷூம்தான் அதிமுக்கிய குற்றவாளிகள் என்கிறது காவல்துறை. இவர்களில் மணிகண்டன் மீது ஏற்கனவே மல்லூர் காவல்துறையினர் பலமுறை செயின் பறிப்பு வழக்கு பதிவு செய்திருப்பதும், அதில் அவரை குண்டாஸ் சட்டத்தின் கீழும் கைது செய்திருப்பதும் தெரிய வந்துள்ளது. மூன்று ஆண்டுக்கு முன், மல்லூர் சரகத்தில் ஒரு பெண்ணும், ஆணும் நள்ளிரவுக்கு மேல் சாலையோரத்தில் இருட்டுப் பகுதியில் 'ஒதுங்கிய போது', அவர்களை நெருங்கிய மணிகண்டன், பெண்ணுடன் வந்த இளைஞரை அடித்து விரட்டிவிட்டு, பெண்ணுடன் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டுள்ளார். 


தீவிர விசாரணையில் அப்படி சாலையோரம் ஒதுங்கிய பெண், பலான தொழிலில் கொடிக்கட்டி பறந்தவர்தான் என்று கூறும் காவல்துறை தரப்பு, அவரையும் கட்டாயப்படுத்தி உறவு கொள்வதும் குற்றம்தான் என்றும் கூறினர். என்றாலும், கொண்டலாம்பட்டி காவல்துறையினர் இப்போது நடந்த வழக்கில் அந்தப்பழைய குற்றப்பின்னணிகளை பதிவு செய்யவில்லை. தொடர் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு காவல்நிலையத்தில் பராமரிக்கப்படும் 'ஹிஸ்டரி ஷீட்' பதிவேடு, மணிகண்டன் மீதும் கொண்டலாம்பட்டி மற்றும் மல்லூர் காவல்நிலையங்களில் பதியப்பட்டுள்ளது. அந்தப் பதிவேட்டை வைத்துதான் இளவரசி அளித்த புகாரில், உடனுக்குடன் மணிகண்டனையும் அவருடைய ஆள்களையும் காவல்துறையால் தூக்க முடிந்திருக்கிறது.


காவல்துறையில் உள்ள மற்ற சில சோர்ஸ்களிடம் விசாரித்தபோது, இப்போது புகார் அளித்திருக்கும் இளவரசியும், அவரை மோட்டார் சைக்கிளில் அழைத்துச்சென்ற உறவுக்கார வாலிபரும்கூட தனிமையில் 'ஒதுங்கிய' போதுதான், மணிகண்டன் கும்பலிடம் சிக்கிக்கொண்டனர் என்றனர். அவர் அணிந்திருந்த நகைகளை பறித்துக்கொண்ட மணிகண்டன், இருவரிடமும் நீண்ட நேரம் விசாரித்துள்ளான். முதலில் அவர்கள் தங்களை நண்பர்கள் என்றும், உறவுக்காரர்கள் என்றும், பிறகு காதலர்கள் என்றும் மாற்றி மாற்றி கூறியுள்ளனர். 


அதன்பிறகு, அவர்கள் இருவரையும் ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்து உதடுகளில் முத்தம் கொடுக்கச்சொல்லி, அதை தன்னுடைய செல்போனில் படம் பிடித்துக்கொண்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. நகைப்பறிப்பு குறித்து காவல்துறையில் சொன்னால், உங்கள் இருவரின் 'லிப்லாக் கிஸ்' படத்தை இணையத்தில் பரவச்செய்து விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். எனினும், இளவரசி அளித்துள்ள சிஆர்பிசி பிரிவு 161 வாக்குமூலத்தில், தன்னை மணிகண்டன் மற்றும் கூட்டாளிகள் பாலியல் ரீதியில் துன்புறுத்தவில்லை என்றே தெரிவித்துள்ளார். இந்த கும்பல் மீது வழக்கமான வழிப்பறி குற்றம் மட்டுமின்றி தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் பெண்களிடம் பாலியல் வன்முறையில் ஈடுபடுவதை தடுக்கும் சட்டப்பிரிவு 4 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.


மேலும், பலான தொழிலில் உள்ள நான்கு பெண்களிடம் மணிகண்டன் செல்போனில் ஆபாசப்படம் எடுத்து வைத்துக்கொண்டு, பலவந்தமாக உறவு கொண்டிருப்பதாகவும் சொல்கிறது காவல்துறை. இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு முக்கிய குற்றவாளியான வெங்கடேசன் தலைமறைவாகிவிட்டார். அவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.


இந்நிலையில், பொள்ளாச்சி பாலியல் சம்பவத்துடன் இதையும் முடிச்சுப்போட்டு சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில், மணிகண்டன் மற்றும் சுபாஷ் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க கொண்டலாம்பட்டி காவல்துறை முடிவு செய்துள்ளது.


இது தொடர்பாக நாம் கொண்டலாம்பட்டி காவல் ஆய்வாளர் புஷ்பராணியிடம் கேட்டபோது, ''பிடிபட்ட கும்பல் 50 பெண்கள், 100 பெண்களை ஆபாசப்படம் எடுத்து பாலியல் வன்புணர்வு செய்ததாக ஊடகங்களில்தான் செய்திகள் வருகின்றன. எங்கள் விசாரணையில் அப்படிப்பட்ட தகவல்கள் கிடைக்கவில்லை. அவர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக செயின்பறிப்பு போன்ற குற்றங்களில்தான் ஈடுபட்டு வந்துள்ளனர். மல்லூர் காவல் சரகத்தில் மட்டும் ஒரு பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சித்ததாக தெரிய வந்துள்ளது,'' என்றார். 


இது ஒருபுறம் இருக்க, தேர்தல் நேரம் என்பதாலும், ஆளுதரப்பு மீது கெட்டப்பெயர் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவும் காவல்துறையினர் திட்டமிட்டே இந்த பட்டர்பிளை பாலியல் குற்ற விவகாரத்தில் பல உண்மைகளை மூடி மறைப்பதாகவும் கூறப்படுகிறது. காவலில் எடுத்து விசாரிக்கும்போது திடுக்கிடும் தகவல்கள்  வெளியாகலாம் எனத்தெரிகிறது.

சார்ந்த செய்திகள்