சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் மீது கடந்த 2003-ம் ஆண்டு கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு கீழ் கோர்ட்டு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை நீதிபதி எம்.தண்டபாணி விசாரித்தார்.
மனுதாரர் தரப்பு வக்கீல்‘சம்பவம் நடந்தபோது ராதாகிருஷ்ணனுக்கு 18 வயது பூர்த்தியாகவில்லை.அவரது வழக்கை சாதாரண கோர்ட்டு விசாரித்து தண்டனை வழங்கியது தவறு. சம்பவத்தைக் கண்ணால் பார்த்தவர்களும் பிறழ் சாட்சிகளாக மாறிவிட்டனர். எனவே, அவரை விடுதலை செய்ய வேண்டும்’என்று வாதிட்டார்.
![chennai high court order](http://image.nakkheeran.in/cdn/farfuture/_TRzFOR3CgCcKxvMDm1EO7yGGW4POh4ZRcy6v9BRnrI/1583726927/sites/default/files/inline-images/Chennai_High_Court%202222222222_15.jpg)
இதற்கு அரசுத் தரப்பில் ஆஜரான குற்றவியல் வக்கீல் அய்யப்பராஜ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ராதாகிருஷ்ணன் மீது 35 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலும் இருந்தவர் என்று வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி எம்.தண்டபாணி,‘சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் பிறழ் சாட்சிகளாக மாறினாலும், அதற்காக குற்றவாளியை விடுதலை செய்ய முடியாது. எனவே, ராதாகிருஷ்ணனுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை 5 ஆண்டுகளாகக் குறைத்து, மேல் முறையீடு வழக்கை தள்ளுபடி செய்கிறேன்’என்று உத்தரவிட்டார்.