![salem district women money and gold police investigation](http://image.nakkheeran.in/cdn/farfuture/WXIEuf400iWap9BcqbWqqN9Tz-shjdxo0VEAL0ViU5c/1605322457/sites/default/files/inline-images/Gold-and-Cash%20%281%29.jpg)
சேலத்தில், ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் சிலர் கருப்பு பணம் வைத்திருப்பதால், அதை வெள்ளையாக்குவதற்காக ஒரு பவுன் நகையை ஒரு லட்சம் ரூபாய்க்கு வாங்கிக் கொள்ள தயாராக இருப்பதாகக்கூறி நூதன முறையில் மர்மப் பெண் ஒருவர் கிராமப் பெண்களிடம் 93 பவுன் நகைகளை சுருட்டிய சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
சேலம் அமானி கொண்டலாம்பட்டி, அரச மரத்துக்காட்டூரைச் சேர்ந்தவர் சபீனா (26). அவர், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றி வருவதாக உள்ளூர் மக்களிடம் கூறி வந்துள்ளார். ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் பலர் கருப்பு பணத்தை வைத்திருக்கிறார்கள் என்றும், அவர்கள் பணத்தை வெள்ளையாக்க ஒரு பவுன் தங்கத்தை ஒரு லட்சம் ரூபாய்க்கு வாங்கிக் கொள்ள தயாராக இருப்பதாகவும் கூறி வந்துள்ளார்.
இத்தொகை, பவுன் கையில் கிடைத்த ஒரு மாதத்தில் வழங்கப்படும் என்றும், அதற்கு முன்னதாக நோட்டரி பப்ளிக் வழக்கறிஞர் மூலம் முத்திரைத்தாளில் உத்தரவாதம் எழுதிக் கொடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
இதை நம்பிய உள்ளூர் பெண்கள் பலர், சபீனாவிடம் தாங்கள் அணிந்திருந்த நகைகளை போட்டிப்போட்டுக் கொண்டு கழற்றிக் கொடுத்துள்ளனர். அதன்படி, காஞ்சனா 16 பவுன், திலகவதி 30 பவுன், மஹாலட்சுமி 16 பவுன், சிவகுமார் 8 பவுன், விஜயா 16 பவுன், மைதிலி 3, சுதாகர் ஒன்றரை பவுன், பாரதி 3 பவுன் என மொத்தம் 93 பவுன் நகைகளை சபீனாவிடம் கொடுத்துள்ளனர்.
சிலர் அடகு வைத்திருந்த நகைகளையும் சபீனாவிடம் கடன் வாங்கிய பணத்தில் மீட்டு, அவற்றையும் கொடுத்துள்ளனர். சிலரிடம் வங்கிக்கடன் வாங்கித் தருவதாகவும் கூறி, நகைகளை பெற்றுள்ளார் சபீனா.
நகைகளை வாங்கி ஓரிரு மாதங்கள் ஆகியும் அவர் சொன்னபடி ஒருவருக்கு கூட பவுனுக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுக்காமல் இருந்ததால் அவர் மீது நகைகளை கொடுத்த பெண்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேலும், திடீரென்று அவர் தான் குடியிருந்து வரும் வீட்டையும் காலி செய்துவிட்டு அருகில் உள்ள இந்திரா நகர் பகுதிக்குச் சென்று விட்டார். அங்கு சென்று விசாரித்தபோதும் சபீனா சரியாக பிடிகொடுத்துப் பேசவில்லை.
அதையடுத்து நகைகளைப் பறிகொடுத்த 20- க்கும் மேற்பட்ட பெண்கள், சபீனா மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி சேலம் மாநகர காவல்துறை ஆணையரிடம் நேற்று முன்தினம் (நவ. 12) புகார் மனு அளித்தனர்.
இந்தப் புகாரின்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஆட்சியர் அலுவலகத்தில் சபீனா என்ற பெயரில் யாரேனும் பணியாற்றுகிறார்களா, இதேபோல் அவர் வேறு யார் யாரிடம் மோசடி செய்திருக்கிறார் என்றும் விசாரணை நடந்து வருகிறது.