![salem childrens incident business man arrested ammapet police](http://image.nakkheeran.in/cdn/farfuture/mGzz1IoKzvY0sJa3E-9sSYDeXic0i71_-VeABPGwn1A/1606186665/sites/default/files/inline-images/ravee33233.jpg)
சேலம் அருகே, இரண்டு சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதான தொழில் அதிபருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.
சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவருக்கு 13 மற்றும் 15 வயதுகளில் இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்களுக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டதால் பேய் பிடித்திருக்குமோ என்று கருதிய பெற்றோர், சிலரின் ஆலோசனையின்பேரில் நாமக்கல் மாவட்டம் மங்களபுரத்தைச் சேர்ந்த மந்திரவாதி சேகர் என்பவரிடம் தாயத்து மந்திரித்துக் கட்டிவருவதற்காக கடந்த வாரம் சிறுமிகளை அழைத்துக்கொண்டு பெற்றோர் சென்றுள்ளனர்.
அப்போது மந்திரவாதி சேகர், சிறுமிகளை பேய் பிடித்திருப்பதாகவும், சில நாள்கள் அவர்களுக்கு இரவு நேரத்தில் ரகசிய பூஜைகள் செய்து பேய் ஓட்ட வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதை நம்பி மகள்களை அங்கேயே விட்டுவிட்டு பெற்றோர் வீடு திரும்பியுள்ளனர். அப்போது பேய் ஓட்டுவதாகக் கூறி மந்திரவாதி சேகர், சிறுமிகள் இருவரையும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் சேகரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமிகளிடம் விசாரித்தபோது, சேகருக்கு முன்பே சேலம் அருகே தொழில் அதிபர் ஒருவரும் அவர்களை நாசப்படுத்தி இருக்கும் அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன.
கள்ளக்குறிச்சி மாவட்டம் நைனாம்பாளையத்தை சேர்ந்தவர் ரவீந்திரன் (42). சேலத்தை அடுத்த சுக்கம்பட்டியில் தங்கியிருந்து குத்தகை அடிப்படையில் விவசாயம் செய்து வந்தார். அத்துடன் மாட்டுத்தீவன விற்பனையும் செய்து வந்தார்.
இவருடைய தோட்டத்தில் மேற்படி சிறுமிகளும், அவர்களுடைய பெற்றோரும் குடும்பத்துடன் தங்கியிருந்து வேலை செய்து வந்துள்ளனர். அப்போது சிறுமிகள் இருவரையும் அவர்களின் பெற்றோருக்கு தெரியாமல் பல மாதங்களாக ரவீந்திரன் பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
இதுகுறித்து சிறுமிகளின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், சேலம் அம்மாபேட்டை காவல்துறையினர் ரவீந்திரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவின்பேரில் சிறையில் அடைக்கப்படுவற்கு முன்பு அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அவருக்கு கரோனா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.