Skip to main content

திருவள்ளுவர் மீது காவி ஸ்டிக்கர்; ஆளுநருக்கு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் கண்டனம்

Published on 16/01/2025 | Edited on 16/01/2025
Saffron sticker on Thiruvalluvar; Priestly Trained Students Association Condemns Governor


'தமிழ் சமூகத்தின் முதுபெரும் அடையாளமான திருவள்ளுவர் மீது காவி ஸ்டிக்கர் ஒட்டும் ஆளுநர் ரவிக்கு தமிழ் ஆன்மீக சமூகத்தின் கண்டனம்' என அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தின் தலைவர் ரங்கநாதன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக வெளியான அறிக்கையில், 'சமத்துவ மண்ணான தமிழ்நாட்டின் சமத்துவ சமயக் கோட்பாடுகளைத் தொடர்ந்து திருடி ஸ்டிக்கர் ஒட்டி வருகிறது பார்ப்பனியம். அய்யா வைகுண்டர், வள்ளலார் தொடங்கி இன்று திருவள்ளுவர் வரையில் திருட்டு தொடர்கிறது. ஆர்.எஸ்.எஸ், ஆளுநர் ரவி, அண்ணாமலை இணைந்து நடத்தும் இக்கூத்தினை அறிவார்ந்த சமத்துவ நெறி கொண்ட தமிழகத்தின் ஆன்மிக மரபு, தமிழ் தமிழகத்தின் சமத்துவ மரபு நிராகரிக்கிறது. ஆளுநரின் செயலை அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம்  வன்மையாக கண்டிக்கிறது

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.

பொருள்

பிறப்பினால் அனைவரும் சமம் செய்யும் தொழிலில் காட்டுகிற திறமையில் மட்டுமே வேறுபாடு காண முடியும்.

தமிழ்நாட்டின் கோயில்களை பார்ப்பனியப் பிடியிலிருந்து மீட்கப் போராடிவரும் மாபெரும்  திராவிட இயக்கத்தை ஒழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படும் ஆர்.எஸ்.எஸ் கூட்டம் அதன் ஒரு பகுதியாக சமத்துவ தமிழ் மரபுகளை கையகப்படுத்தும் வேலையைச் செய்து வருகிறது.

சிதம்பரத்தில் பட்டியல் சமூகத்தினருக்கு பூணூல் போடுவது, வள்ளுவருக்கு காவி சாயம் பூசுவது, வள்ளலாரை சனாதன சிமிழுக்குள் அடைப்பது வைகுண்டரை பார்ப்பனிய மயமாக்குவது என்ற ஆன்மீக சித்து வேலைகளை பார்ப்பனிய அயோக்கியத்தனங்களை தமிழ்நாட்டின் சமத்துவ ஆன்மீகம் உறுதியாக நிராகரிக்கிறது.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் - யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற மாபெரும் சமத்துவ மரபு கொண்ட தமிழ் ஆன்மீக சமூகம் ஆர்எஸ்எஸ் பாஜக ஆளுநர் ரவி அண்ணாமலையின் ஸ்டிக்கர் ஓட்டும் அரசியலை மோசடியான ஆன்மிகத்தை கடுமையாக எதிர்க்கிறது வன்மையாகக் கண்டிக்கிறது.

பட்டியல் சமூகத்தினருக்கு பூணூல் போட்டு பார்ப்பனிய சிமிழுக்குள் அடைக்கும் ஆர்.என். ரவி சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழில் தேவாரம் திருவாசகம் பாட பட்டியல் சமூகத்தை அனுமதிப்பாரா? தீட்சிதர்களிடம் பேசுவாரா?

தமிழகம் முழுக்க உள்ள சைவ வைணவ கோயில்களில் பிறப்பால் பார்ப்பனர் தவிர மற்ற கவுண்டர் தேவர் நாடார் வன்னியர், ஆதிதிராவிடர் உள்ளிட்ட இந்து தமிழ் சாதியினரை அர்ச்சகராக்க கோரிக்கை வைப்பாரா?
உண்மையில் இந்துக்களுக்கான கட்சி பாஜக எனில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக பாஜக குரல் கொடுக்காதது ஏன்?

தனது பார்ப்பனிய, சனாதன வைதீக ஆன்மீகத்தில் நம்பிக்கை அற்று, மாபெரும் தமிழ் சமய மரபை களவாடும் இக்கூட்டத்தை  மொத்தமாக முறியடிப்போம்.  திருவள்ளுவர்  சனாதன தர்மத்திற்கு ஆதரவாக செயல்பட்டார் என்ற தோற்றத்தை உருவாக்க அவருடைய உருவத்தில் காவி சாயம் பூசி வருகிறார் ஆளுநர் ரவி.

தமிழ்நாடு பாஜக தலைவரும் ஏற்கனவே சனாதன தர்மத்தைப் பாதுகாத்தவர் என்று சொல்லி திருவள்ளுவர் படத்துக்கு சாயம் பூசி  ஏற்கனவே வெளியிட்டு இருக்கிறார். தமிழ் மரபை களவாடும் இந்த இழி செயலை  தமிழக சமத்துவ ஆன்மீக சமூகம் வன்மையாக கண்டிப்பதோடு அனைத்து தமிழ் மக்களும் பக்தர்களும் இதற்கு எதிராக தங்கள் கண்டனத்தை பதிவு  செய்வதோடு, தமிழக கோயில்களில் முன்பு ஆளுநரை கண்டித்து  போராட்டம் நடத்த வேண்டும் என்று அர்ச்சக மாணவர் சங்கம் கோருகிறது.

பாஜகவை மட்டுமல்ல ஆர்.எஸ்.எஸ் ஆளுநர் ஆர்.என். ரவியையும் வீட்டுக்கு அனுப்ப தமிழ் ஆன்மீக உலகம் கோயில், கோயிலாகச் சென்று தனது பணியைச் செய்யும். தனது மரபை, ஆன்மீகத்தை பேணிப் பாதுகாக்கத் தவறிய எந்த ஒரு இனமும் வரலாற்றில் நீடிக்காது. நமது தனித்த  சமத்துவ ஆன்மீக மரபை பாதுகாப்போம் ஆர்எஸ்எஸ் ஆளுநர் ரவி கூட்டத்தை நிராகரிப்போம்!

ஆரிய பார்ப்பனியத்தை வீழ்த்துவோம்! கோயில்களில் சமத்துவத்தை நிலைநாட்டப் போராடுவோம். திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசிய ஆரிய சனாதனத்தை நிராகரிப்போம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்