அமெரிக்காவைச் சேர்ந்த நிதி ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் அதானி குழுமம் முறைகேடுகளில் ஈடுபடுவதாகக் கடந்த 2023 ஆண்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் அனைத்தும் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதானி நிறுவனங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்தும், அதானி குழுமத்தின் முன்னாள் உயரதிகாரிகள் சிலரை நேர்காணல் செய்தும் திரட்டியது என ஹிண்டன்பெர்க் நிறுவனம் தெரிவித்திருந்தது.
ஹிண்டன்பெர்க் நிறுவனம் அறிக்கையால் அதானி குழுமம் பல பில்லியன் டாலர்களை இழந்து இருந்தது. மேலும் இது பெரும் சர்ச்சையாகவும் மாறி இருந்தது. தொடர்ந்து நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அதானி விவகாரத்தை கையில் எடுத்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பினர். இதனால் அமளி ஏற்பட்டு நாடாளுமன்றம் தொடர்ந்து முடங்கும் சூழல் ஏற்பட்டது.
தற்போது வரை அதானி நிறுவனத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில் ஹிண்டன்பெர்க் ஆராய்ச்சி நிறுவனத்தை மூடுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அமெரிக்க முதலீட்டு நிறுவனமான ஹிண்டன்பெர்க் ஆராய்ச்சி நிறுவனம் நிரந்தரமாக மூடப்படுவதாக அதன் நிறுவனர் ஆண்டர்சன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.