பொங்கல் பண்டிகையையொட்டி, ஆண்டுதோறும் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். இந்த போட்டியை காண பல பகுதிகளில் இருந்தும் மக்கள் ஆர்வத்துடன் வருகை தருவார்கள். அந்த வகையில் மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று முன்தினம் விறுவிறுப்பாக நடைபெற்றது. வாடிவாசலில் இருந்து சீறிப்பாயும் காளைகளை, வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள 12,500 காளை உரிமையாளர்கள் விண்ணப்பித்த நிலையில் 3500 காளைகளை மட்டுமே அனுமதிக்க முடியும் என்பதால் ஏற்பாட்டாளர்கள் திணறல் நிலை ஏற்பட்டது.
தொடர்ந்து இரண்டாம் நாளான நேற்று மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்நிலையில் மூன்றாம் நாளான காணும் பொங்கல் தினமான இன்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கி நடைபெற்று வருகிறது.
விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார். தற்பொழுது ஜல்லிக்கட்டு போட்டியின் முதல் சுற்று நிறைவு பெற்றது. முதல் சுற்று முடிவில் ஐந்து காளைகளை பிடித்து மதுரை அபி சித்தர் முதலிடத்தில் உள்ளார்.
கடந்தாண்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இரண்டாவது பரிசு பெற்றவர் அபி சித்தர் என்பது குறிப்பிடத்தகுந்தது. முதல் சுற்றில் 110 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதில் 14 காளைகள் பிடிபட்டன. இதுவரை நான்கு பேர் காயமடைந்துள்ளனர். மாடிப்படி வீரர் ஒருவர்; காலை உரிமையாளர்கள் இருவர்; பார்வையாளர் ஒருவர் என மொத்தம் நான்கு பேர் காயமடைந்தனர். இதில் படுகாயம் அடைந்த ஒருவர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.