கேரள லாட்டரியில், தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. கேரள அரசின் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பம்பர் லாட்டரியில் இந்த வருடம் முதல் பரிசு 12 கோடி என்று அறிவிக்கப்பட்டு, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு விற்பனைக்கு வந்தது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவருக்கு முதல் பரிசு 12 கோடி கிடைத்துள்ளது.
அந்த பம்பர் பரிசின் குலுக்கல் கடந்த 17ம் தேதியன்று திருவனந்தபுரம் மாநகராட்சியின் மேயர் ஆரியா ராஜேந்திரன் முன்னிலையில் நடந்தது. அதில், முதல் பரிசான 12 கோடி ரூபாய் எக்ஸ்.ஜி.358753 என்ற எண்ணுள்ள டிக்கெட்டிற்கு கிடைத்துள்ளது.
அந்தப் பரிசைப் பெறும் அதிர்ஷ்டசாலி கேரள மாநிலத்தில் தென்படவில்லை. ஆனால் குறிப்பிட்ட அந்தச் சீட்டு தமிழக - கேரள எல்லையிலுள்ள ஆரியங்காவு நகரின் பரணி லக்கி சென்டரிலிருந்து விற்பனை செய்யப்பட்டது என தெரியவந்தது. அந்த லாட்டரி சென்டர் நடத்துகிற தமிழகத்தின் தென்காசியைச் சேர்ந்த மொத்த வியாபாரியான வெங்கடேஷ் என்பவரால் சுமார் 5700 டிக்கெட்கள் விற்கப்பட்டது என்பது தெரியவர, அதிர்ஷ்டசாலியைத் தேடும் படலம் தொடங்கியது.
அந்த லக்கி சென்டர் உரிமையாளருக்கும் அந்தச் சீட்டு யாரிடம் விற்கப்பட்டது என்று தெரியாத காரணத்தால், இரண்டு நாட்களாக அந்த அதிஷ்டசாலி யார் என்று தெரியாத குழப்பம் நீடித்தது.
தொடர் தேடலில், அந்த அதிர்ஷ்டசாலி, கேரள எல்லையை ஒட்டியிருக்கும், தென்காசி மாவட்டத்தின் இரவிய தர்மபுரம் கிராமத்தில் வசிக்கும் ஷர்புதீன் என்பது தெரிய வந்தது. நேற்றைய தினம் (20.01.2021) கேரள தலைமைச் செயலகத்திற்குச் சென்று அங்குள்ள லாட்டரித்துறை அலுவலகத்தில் அதன் இயக்குனர் கார்த்திகேயனிடம் டெபாசிட் செய்திருக்கிறார் ஷர்புதீன்.
ஏஜண்ட் கமிசன் மற்றும் வரி நீங்கலாக 7.56 கோடி ஷர்புதீனுக்குக் கிடைக்கும். இதை விற்பனை செய்த வெங்கடேஷுக்கு ஏஜண்ட் கமிஷனாக, ஒரு கோடி 20 லட்சம் கிடைக்கும்.
ஷர்புதீன் கேரளா எல்லையை ஒட்டிய தமிழகத்தைச் சேர்ந்தவர். துபாயில் பணியிலிருந்தபோது கரோனா காரணமாக சொந்தக் கிராமம் திரும்பியவருக்கு வேலைவாய்ப்பில்லை. அதன் காரணமாக அண்டையிலுள்ள கேரளாவின் ஆரியங்காவு நகரில் வெங்கடேஷ் லக்கி சென்டரில் லாட்டரி சீட்டுக்களை வாங்கி ஆரியங்காவிலிருந்து புனலூர் வரை சென்று சில்லரை விற்பனை செய்து கிடைக்கும் கமிசனில் பிழைப்பை ஓட்டி வந்திருக்கிறார்.
இந்நிலையில், வழக்கமாக தான் விற்கும் லாட்டரி டிக்கெட்களில் ஒன்றை மட்டும் எடுத்து தனக்காக ஒதுக்கி வைத்துக்கொள்ளும் பழக்கம் கொண்ட ஷர்புதீன், இந்தப் பம்பர் லாட்டரியிலும் தனக்காக ஒரு சீட்டை ஒதுக்கி வைத்துக்கொண்டு மற்றவைகளை விற்றிருக்கிறார். அப்படி எடுத்து வைத்த அந்த டிக்கெட்டின் எண்ணிற்குத்தான் பம்பர் பரிசாக 12 கோடி அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது.
கோடிகளைப் பரிசாகப் பெற்றவரும், கோடியைத் தாண்டிய கமிசனைப் பெறும் ஏஜண்ட்டும் தமிழர்களே என்பது கவனிக்கத்தக்கது. அதிர்ஷ்டசாலி ஷர்புதீனை நாம் தொடர்பு கொண்டபோது அவர் அழைப்பை ஏற்கவில்லை.