![Rs 20 lakh worth of kerosene alcohol from a village field house ...](http://image.nakkheeran.in/cdn/farfuture/eDR2WXbEsOTr8by9QnMyU5lflxUgzxdRRVieZJoVjXk/1604650216/sites/default/files/inline-images/th_96.jpg)
விழுப்புரம் மாவட்டம் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது ஒலக்கூர். இந்த ஊர் அருகே உள்ளது தேங்காய் பக்கம் கிராமம். இங்குள்ள வயல்வெளி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் எரிசாராய கேன்கள், போலி மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அதையடுத்து அவர் நேரடியாக அந்த இடத்துக்கு சக போலீசாருடன் சென்று அந்த வயல்வெளி வீட்டில் இருந்த ஒரு பெண்மணியிடம் விசாரணை நடத்தினார். இதில் வீட்டில் ஒரு அறை மட்டும் பூட்டப்பட்டிருந்தது. அதை, அந்த பெண்மணி திறப்பதற்கு மறுத்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அறையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கே 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 507 கேன்களில் எரிசாராயம் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சோதனை செய்ததில் அந்த அறையில் 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட 12 கேன்களில் எரிசாராயம் மற்றும் 20 அட்டைப் பெட்டிகளில் 1,080 போலி மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர் வசிக்கும் அந்த நிலம் சென்னையை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என்றும், அந்த நிலத்தை ஒலக்கூர் மேல்பாதி தெருவை சேர்ந்த கோதண்டம் என்பவரது மகன் ராமு என்பவர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்வது போன்று எரிசாராயம் வரவழைக்கப்பட்டு அதன் மூலம் போலி மதுபாட்டில்கள் தயாரித்து விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது.
18 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் மற்றும் போலி மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மொத்த மதிப்பு ரூ.20 லட்சம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து ஒலக்கூர் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். எரிசாராய பதுக்கல் போலி மதுபாட்டில்கள் தயாரிப்பு சம்பந்தமாக கிடைத்த தகவலை அடுத்து மாவட்ட எஸ்.பி., போலீசாருடன் நேரடியாக சென்று நடவடிக்கை எடுத்தது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஒரு பக்கம் குற்றங்களை காவல்துறை தடுத்துக் கொண்டே உள்ளது. மறுபக்கம் குற்றங்கள் தொடர்ந்தபடியே உள்ளன.