கரூர் மாவட்டம் குளித்தலை நகர் பகுதி 1-வது வார்டு தெற்கு மணத்தட்டை செல்லும் வழியில் திருச்சி-கரூர் நெடுஞ்சாலையோரம் தேவேந்திர குல வேளாளர் அமைப்பைச் சேர்ந்த கொடி கம்பம் உள்ளது. நேற்று இரவு மர்ம நபர்கள் கம்பத்தில் இருந்த கொடியை அறுத்து எரிந்துள்ளனர். இதனால் இன்று காலை அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தைக் கண்டித்தும், சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கக் கோரியும் தேவேந்திரகுல வேளாளர் அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் திருச்சி - கரூர் நெடுஞ்சாலையில் அமர்ந்து இன்று காலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் ஆங்காங்கே நின்றது.
சம்பவ இடத்திற்கு வந்த குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதாகவும், சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். நடவடிக்கை எடுப்பதாக டிஎஸ்பி செந்தில்குமார் உறுதி அளித்தார். மேலும் அந்தப் பகுதியில் சிசிடிவி கேமராக்கள் காவல்துறை சார்பில் பொருத்தவும் உத்தரவிட்டார். இதனை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. சம்பவத்தைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.