நீட் எனும் கொடுவாளுக்கு இன்னொரு இன்னுயிர் அநியாயமாக பறிபோய்விட்டதே என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் விழுப்புரத்தைச் சேர்ந்த மாணவி பிரதீபா நேற்று இரவு தற்கொலை செய்துகொண்டார். கூலித் தொழிலாளியின் மகளான பிரதீபா 12 ஆம் வகுப்பில் 1,125 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். கடந்த ஆண்டு நீட் தேர்வில் 155 சதவீத மதிப்பெண்கள் எடுத்த பிரதீபாவுக்கு தனியார் மருத்துவக்கல்லூரியில் தான் சேருவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. தனியார் கல்லூரியில் சேரும் அளவிற்கு தனது பெற்றோர்களிடம் பணம் இல்லாத காரணத்தால் அப்போது மருத்து படிப்பில் சேரவில்லை.
தொடர்ந்து மனதைரியத்துடன் நீட் தேர்வுக்கான வகுப்புகளுக்கு சென்று இந்த ஆண்டு நீட் தேர்வை எழுதியுள்ளார். இந்நிலையில் நேற்று, வந்த நீட் தேர்வு முடிவில் அவர் 39 சதவீத மதிப்பெண்கள் மட்டுமே பெற முடிந்தது. அந்த விரக்தியில் மனமுடைந்த அவர் நேற்று இரவு தற்கொலை செய்துகொண்டார். நீட் தேர்வு தோல்வியால் மாணவி பிரதீபா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து மு.க.ஸ்டாலின் இன்று அவர் டிவிட்டர் பதிவில் கூறியதாவது,
அந்தோ.. நீட் எனும் கொடுவாளுக்கு இன்னொரு இன்னுயிர் அநியாயமாக பறிபோய்விட்டதே! 1125 மதிப்பெண்கள் பெற்றிருந்தும், மருத்துவ கனவு சிதைக்கப்பட்டதால் மாணவி பிரதீபா தற்கொலை செய்துகொண்ட கொடுஞ்செய்தி இதயத்தை நொறுக்குகிறது! மீளாத் துயரில் இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
ஏற்கனவே அரியலூர் அனிதாவை இழந்தோம். இப்போது பெரவளூர் பிரதீபாவை இழந்து நிற்கிறோம். நீட் விலக்கு கோரும் தமிழகத்தின் ஒட்டுமொத்த குரலுக்கு செவி சாய்க்காத மத்திய, மாநில அரசுகளின் வஞ்சகத்தை வன்மையாக கண்டிப்பதோடு இந்த உயிர்ப்பலிக்கு இரண்டு அரசுகளும் பொறுப்பேற்க வேண்டும்! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.