குற்றாலத்தில் அண்மையில் ஒரே நாளில் கிலோ கணக்கில் கெட்டுப்போன சிப்ஸ், அல்வா, பேரீச்சம்பழம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மீண்டும் அங்கு பேரீச்சை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தற்போது சபரிமலை சீசன் என்பதால் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் சாமி தரிசனம் முடித்த கையோடு தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் குளியல் போட்டுவிட்டு திரும்புவதை பெரும்பாலானோர் கடைபிடித்து வருகின்றனர். அப்படி சபரிமலையில் இருந்து வரும் பக்தர்களை குறி வைத்து குற்றாலத்தில் தரமற்ற உணவுப் பொருட்களை விற்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.
நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் வந்து செல்லும் நிலையில், தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பல்வேறு கடைகளில் சிப்ஸ், அல்வா, பேரிச்சம்பழம் ஆகியவை விற்கப்படுகிறது. பல இடங்களில் காலாவதியான சிப்ஸ், அல்வா ஆகியவற்றை விற்பதாக புகார்கள் எழுந்தது. புகாரின் பேரில் கடந்த ஐந்தாம் தேதி குற்றாலம் லட்சுமி நகர் பகுதியில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரி நாகசுப்பிரமணியன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.
அப்பொழுது காலாவதியான 2,900 கிலோ சிப்ஸ், 4,230 கிலோ மஸ்கோத் அல்வா மற்றும் 1060 கிலோ பேரீச்சம்பழ பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு குற்றாலம் பேரூராட்சியில் உள்ள குப்பைக் கிடங்கிற்கு எடுத்துச் செல்லப்பட்டு ரசாயனம் தெளித்து அழிக்கப்பட்டது. தொடர்ந்து அந்த பகுதியில் இதுபோன்ற காலாவதியான பொருட்களை விற்றால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில், அதே குற்றாலம் பகுதியில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரி நாகசுப்பிரமணியன் தலைமையிலான குழுவினர் மீண்டும் ஆய்வு செய்தனர். அப்பொழுது ஒரு கடையில் பேரீச்சை பழத்தின் மீது மினரல் ஆயில் தடவி புதியது போல பளபள என்று விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பேரீச்சை பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மொத்தம் 1,100 கிலோ மினரல் ஆயில் பூசப்பட்ட பேரீச்சம் பழம் பறிமுதல் செய்யப்பட்டது. இவ்வாறு ஆயில் பூசி விற்கப்படும் பேரீச்சை உடலுக்கு மிகவும் கெடுதல் என தெரிவித்த அதிகாரிகள் மீண்டும் அந்த பகுதி கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துச் சென்றனர்.