Skip to main content

குடிதண்ணீர் கேட்டு சாலை மறியல்!

Published on 14/11/2021 | Edited on 15/11/2021

 

Road block asking for drinking water!

 

கடலூர் மாவட்டம், சிதம்பரம் வண்டிகேட் பகுதியில் பி.எஸ்.என்.எல். குடியிருப்பு உள்ளது. இதில் 24 குடியிருப்பில் 18 குடும்பங்கள் வசித்துவருகிறார்கள். இதில் 4 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். மற்ற அனைவரும் தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றுபவர்களாக உள்ளனர். இவர்களின் வீட்டு வாடகை அவர்களது சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுகிறது.

 

இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக குடிதண்ணீர் சரியாகக் கிடைக்காமல், இவர்கள் சிரமம் அடைந்துவருவதாகவும், அதேபோல் கழிப்பறை கழிவுகள் வெளியே செல்ல முடியால் அடைப்பு ஏற்பட்டு குடியிருப்பு அருகே தேங்கியிருப்பதால் துர்நாற்றம் வீசுகிறது என்றும் சம்பந்தபட்ட பி.எஸ்.என்.எல். அலுவலர்களிடம் புகார் கூறியுள்ளனர்.

 

ஆனால், குடியிருப்பைப் பராமரிக்காமல் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் ஒவ்வொரு முறையும் மெத்தனமாக பதிலைக் கூறிவந்துள்ளனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை (14.11.2021), இரண்டு நாட்களாக குடிதண்ணீர் வரவில்லை; குடிதண்ணீர் வேண்டும் எனக் குடியிருப்பவர்கள் கேட்டுள்ளனர். அதற்கு சம்மந்தபட்ட அலுவலர், பணம் வசூல் செய்து நீங்களே சரிசெய்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

 

இதனால் ஆத்திரமடைந்த குடியிருப்பு வாசிகள், குடியிருப்பு வெளியே உள்ள கடலூர் - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் காலி குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனையறிந்த சிதம்பரம் நகர் காவல் ஆய்வாளர் ஆறுமுகம் மற்றும் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதனம் செய்து அனுப்பிவைத்தனர்.  

 

 

சார்ந்த செய்திகள்