கடந்த சில நாட்களாக தக்காளி வரத்து குறைவு எதிரொலியாக தமிழகம் முழுக்க தக்காளி விலை உயரத் தொடங்கியது. ஒரு கிலோ தக்காளி சில்லறை விற்பனையில் ரூ.120 முதல் 130 வரை உயர்ந்து விற்பனையானது. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். தக்காளி விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து உழவர் சந்தையில் தோட்டக்கலைத்துறை சார்பில் செயல்படும் கடைகளில் மலிவு விலையில் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி நேற்று ஈரோடு சம்பத் நகர் மற்றும் சத்தியமங்கலத்தில் உள்ள உழவர் சந்தையில் தோட்டக்கலைத்துறை சார்பில் மலிவு விலையில் ஒரு கிலோ தக்காளி ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஈரோடு சம்பத் நகரில் இன்று தோட்டக்கலைத்துறை சார்பாக 150 கிலோ தக்காளி விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு இருந்தது. இவை சில மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்து விட்டன. இதைப்போல் சத்தியமங்கலத்திலும் 100 கிலோ தக்காளி விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. இன்று முதல் கோபி பெருந்துறை உழவர் சந்தையில் தோட்டக்கலைத்துறை சார்பாக ஒரு கிலோ தக்காளி ரூ.85-க்கு விற்கப்பட்டது. நாளை ஓசூரில் இருந்து மீண்டும் விவசாயிகளிடமிருந்து தக்காளி கொள்முதல் செய்யப்பட்டால் விலை குறையும் என தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இதைப்போல் ஈரோடு வ.உ.சி. மார்க்கெட்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து காய்கறி வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்து உள்ளது. இதனால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். குறிப்பாக தக்காளி, சின்ன வெங்காயம், பீன்ஸ், இஞ்சி போன்றவற்றின் விலை உச்சத்தை தொட்டு வருகின்றன. இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.110க்கு விற்பனை ஆனது. இதேபோல் சின்ன வெங்காயத்தின் விலை கடந்த சில நாட்களாக உச்சத்தை தொட்டு வருகிறது. நேற்று புதிய உச்சமாக ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ. 150க்கு விற்பனையான நிலையில் இன்று ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ. 10 அதிகரித்து ரூ.160க்கு விற்பனை ஆனது. இதனால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
முக்கியமான காய்கறிகள் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் மக்களின் கவனம் இப்போது கீரை வகைகளில் திரும்பி உள்ளது. முன்பு சாப்பாட்டுக்கு இரண்டு வகையான காய்கறிகள் வாங்கிய மக்கள் தற்போது சாப்பாட்டுக்கு கீரைகளை வாங்கி வருகின்றனர். கீரை விலையும் மலிவாக இருப்பதால் மக்கள் ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர். சிறுகீரை, மிளகு தக்காளி கீரை, அரைக்கீரை, பாலக்கீரை, செங்கீரை, முருங்கைக்கீரை ஆகிய கீரைகள் ஒரு கிலோ ரூ. 10க்கு விற்கப்படுகிறது. இதேபோல் கரிசலாங்கண்ணி கீரை, தண்டுக்கீரை, அகத்திக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை ஆகிய கீரைகள் ஒரு கிலோ ரூ. 8க்கு விற்கப்படுகிறது. கடந்த மூன்று நாட்களாக கீரை விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல் எலுமிச்சம்பழம் வியாபாரமும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. காய்கறியின் விலை உயர்வால் பொதுமக்கள் எலுமிச்சம்பழத்தை அதிக அளவில் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். வ.உ.சி. மார்க்கெட்டில் ஒரு எலுமிச்சம்பழம் ரூ. 4 முதல் 7 வரை விற்கப்படுகிறது. ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தற்போது எலுமிச்சை சாதம், புளி சாதத்திற்கு மாறி உள்ளனர்.