பெரியார் பல்கலை பேராசிரியர் ஒருவருக்கு மீள்பணியமர்வு வழங்க சிண்டிகேட் குழு ஒப்புதல் அளித்துள்ளதற்கு, பேராசிரியர்களிடையே மீண்டும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
சர்ச்சைகளுக்கு பெயர் பெற்ற சேலம் பெரியார் பல்கலையில் இயற்பியல் துறைத் தலைவராக பணியாற்றி வருபவர் குமாரதாஸ். இவர், வரும் ஜூன் மாதத்துடன் ஓய்வு பெறுகிறார். இவரை மையப்படுத்தித்தான் கடந்த இரண்டு மாதங்களாக இந்தப் பல்கலையில் பல்வேறு பரபரப்பு நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. கடந்த மார்ச் 1ம் தேதி நடக்க இருந்த சிண்டிகேட் குழு கூட்டத்தில், குமாரதாஸூக்கு, வரும் கல்வி ஆண்டிலும் மீள் பணியமர்வு வழங்குவது தொடர்பாக பொருள்நிரல் வைக்கப்பட்டு இருந்தது.
ஓய்வு பெற்றவர்களுக்கு மீள் பணியமர்வு கூடாது என்று அரசாணை உள்ளது. ஏற்கனவே இதே பல்கலையில் ஓய்வு பெற்ற இருவருக்கு மீள்பணி வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது. இவ்விரண்டு அம்சங்களையும் சுட்டிக்காட்டி, குமாரதாஸ் குறித்த பொருள்நிரலை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளக்கூடாது என்று பெரியார் பல்கலை ஆசிரியர்கள் சங்க பொதுச்செயலாளர் பிரேம்குமார் அரசுத்தரப்பு சிண்டிகேட் உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதி இருந்தார்.
சிண்டிகேட் கூட்டத்திற்கு முன்பே குமாரதாஸ் குறித்த மாபெரும் ரகசியத்தை கசிய விட்டதாகக் கூறி, நிரந்தர இன்சார்ஜ் பதிவாளர் தங்கவேல், வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர் பிரேம்குமாரை கடந்த மார்ச் 5ம் தேதி சஸ்பெண்ட் செய்தார். அதாவது, சங்கவாதியாக செயல்பட்ட பிரேம்குமாரை, பல்கலை ஆசிரியராக கருதி சஸ்பெண்ட் செய்தனர். சஸ்பெண்ட் நடவடிக்கையை நீதிமன்றம் மூலம் உடைத்து விடுவார் என்று கருதிய பல்கலை நிர்வாகம், வரலாற்றுத்துறையில் எம்.ஏ., படித்து வரும் ஒரு பட்டியலின மாணவியைத் தூண்டிவிட்டு, பிரேம்குமார் மீது பாலியல் மற்றும் பி.சி.ஆர் புகார் கொடுக்க வைத்தது பல்கலை நிர்வாகம்.
மீள்பணியமர்வு குறித்த ராணுவ ரகசியம் கசிந்ததால் மார்ச் 1ம் தேதி நடக்க வேண்டிய சிண்டிகேட் கூட்டத்தை ரத்து செய்தது பல்கலை. மேலும், உயர்கல்வித்துறை செயலர் கார்த்திகேயன் தலையிட்டு, 'குமாரதாஸ் விவகாரத்தை என்னிடம் விட்டுவிடுங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன்,' என்று கூறி அப்போதைக்கு இந்த விவகாரத்தை ஆறப்போட்டார்.
இந்த நிலையில் மார்ச் 24ம் தேதி ஸூம் மீட்டிங் மூலம் சிண்டிகேட் கூட்டத்தை நடத்தியது பெரியார் பல்கலை. அதில் குமாரதாஸூக்கு மீள் பணியமர்வு வழங்க ஒப்புதலைப் பெற்றிருக்கிறது. சிண்டிகேட்டில் கலந்து கொண்ட 14 உறுப்பினர்களில் 12 பேரின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. சிண்டிகேட் குழுவின் முடிவுக்கு பெரியார் பல்கலை மட்டுமின்றி இதர பல்கலை பேராசிரியர்கள் தரப்பிலும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இது தொடர்பாக அனைத்துப் பல்கலை ஆசிரியர்கள் சங்க முன்னாள் தலைவர் பாண்டியன் நம்மிடம் பேசினார். “ஒரு கல்வி ஆண்டின் இடையில் ஒரு பேராசிரியர் ஓய்வு பெறுகிறார் எனில், இடைப்பட்ட காலத்தில் அந்தக் காலியிடத்தை நிரப்புவதில் தாமதம் ஏற்படும். இதனால் மாணவர்களின் கல்வி நலன் பாதிக்கப்படும் என்பதால், கல்வி ஆண்டின் இடையில் ஓய்வு பெறும் ஆசிரியருக்கு மீள்பணியாற்றும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. மீள்பணியமர்வு செய்யப்படும் ஆசிரியர், அந்தக் கல்வி ஆண்டு முடியும் வரை மட்டுமே பணியில் தொடருவார்.
பெரியார் பல்கலையைப் பொருத்தவரை, ஒரு கல்வி ஆண்டு என்பது ஜூலை முதல் ஏப்ரல் வரையிலான 10 மாத காலம் ஆகும். மே, ஜூன் மாதங்கள் கோடை விடுமுறை காலம். பேராசிரியர் குமாரதாஸ், வரும் ஜூன் மாதம் ஓய்வு பெறுகிறார். அதாவது, அவர் கல்வி ஆண்டுக்கு இடையில் இல்லாமல், கோடை விடுமுறை காலத்தில்தான் ஓய்வு பெறுகிறார். இந்த நிலையில், அவருக்கு மீள்பணியமர்வு வழங்க சிண்டிகேட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது பெரியார் பல்கலை சாசன விதிகளுக்கு முரணானது. இதன் பின்னணியில் சாதி, அரசியல், பணம் என பல்வேறு உள்நோக்கங்கள் இருப்பதாக கருதுகிறேன்.
இதே பெரியார் பல்கலை, ஏற்கனவே கடந்த கல்வி ஆண்டுகளில் இதேபோல் ஜூன் மாதத்துடன் ஓய்வு பெற்ற மேலாண்மைத்துறை பேராசிரியர் ராஜேந்திரன், தாவரவியல் துறை பேராசிரியர் முருகேசன் ஆகியோருக்கு மீள்பணியர்த்தம் வழங்க மறுத்துவிட்டது. கடந்த 96வது சிண்டிகேட் கூட்டத்தில், ஜூன் மாதத்தில் ஓய்வு பெறும் ஆசிரியருக்கு மீள்பணியமர்வு வழங்க முடியாது என்று தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. இந்த நிலையில் கடைசியாக நடந்த 111வது சிண்டிகேட் கூட்டத்தில் ஜூன் மாதத்துடன் ஓய்வு பெறும் குமாரதாஸூக்கு மீள் பணியமர்வு குறித்த அஜண்டாவை விவாதத்திற்கு வைத்ததே விதிகளை மீறிய செயல்தான். இதை தெரிந்தே செய்த துணைவேந்தர், பதிவாளர் ஆகியோர்தான் குற்றவாளிகள். அவர்கள் இருவரையும் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும்.
பெரியார் பல்கலை ஏற்கனவே நிறைவேற்றிய தீர்மானத்தை சுட்டிக்காட்டித்தான் உதவி பேராசிரியர் பிரேம்குமார் ஒரு சங்கத்தின் நிர்வாகியாக கருத்து தெரிவித்து இருந்தார். அதற்காக அவர் மீது உள்நோக்கத்துடன் பல்கலை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. பல்வேறு சர்ச்சைகளுடன், விதிகளுக்கு புறம்பாக செயல்பட்டு வரும் பெரியார் பல்கலையில் வேந்தர் என்ற ரீதியில் தமிழக ஆளுநர் நிர்வாக விசாரணை நடத்த வேண்டும்” என்கிறார் பாண்டியன்.
இது ஒருபுறம் இருக்க, மேலாண்மைத்துறை பேராசிரியர் ராஜேந்திரன், தாவரவியல் துறை பேராசிரியர் முருகேசன் ஆகியோருக்கு மீள்பணியமர்வு மறுக்கப்பட்டதற்கான காரணங்களை பெரியார் பல்கலை வெளியிட்டுள்ளது. அதில், பேராசிரியர் ராஜேந்திரன் பல்கலை பணிப்பதிவேட்டில் தனது பிறந்த தேதியை 4.6.1958 என்று குறிப்பிட்டிருக்கிறார் என்றும், அதன்படி அவருக்கு 4.6.2018ம் தேதியுடன் 60 வயது பூர்த்தி அடைந்து, அந்த மாத இறுதியில் ஓய்வு பெறுகிறார் என்று குறிப்பிட்டுள்ளது.
அதேநேரம், ராஜேந்திரனின் எஸ்.எஸ்.எல்.சி சான்றிதழில் அவருடைய பிறந்த தேதி 10.11.1957 என்று குறிப்பிடப்பட்டு உள்ளதாகவும், அதன்படி கணக்கிட்டால் 9.11.2017ம் தேதியுடன் 60 வயது பூர்த்தி அடைந்து, அந்த மாத இறுதியில் ஓய்வு பெற்று விடுகிறார் என்றும் கூறியுள்ளது. ஆனால், பல்கலை நிர்வாகமோ, ''பேராசிரியர் ராஜேந்திரன் பல்கலை ஆவணங்களில் போலியான பிறந்த தேதியைக் குறிப்பிட்டு இருந்தபோதும், அவர் மீது எந்த விதமான ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்காமல் பெருந்தன்மையுடன் நிர்வாகம் நடந்து கொண்டிருக்கிறது. எஸ்.எஸ்.எல்.சி சான்றிதழின் அடிப்படையில் பிறந்த தேதியைக் கணக்கிட்டால் அவரை 30.6.2018 வரை கூடுதலாக 7 மாதங்கள் கூடுதலாக பணியாற்ற வாய்ப்பு அளித்திருக்கிறது. அதனால் அவருக்கு மீள் பணியமர்வு வாய்ப்பு மறுக்கப்படுகிறது'' என்று விளக்கம் அளித்துள்ளது.
பல்கலையின் இந்த விளக்கம்தான், தற்போது வேறு புதிய சர்ச்சைக்கும் வித்திட்டுள்ளது. பேராசிரியர் ராஜேந்திரன் போலி பிறப்புச் சான்றிதழை சமர்ப்பித்து இருந்தால், அவருக்கு வழங்கப்பட்ட ஊதியத்தை திரும்பப் பெற வேண்டும். அவர் மீது கிரிமினல் நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யாமல் பல்கலை நிர்வாகம் அவர் மீது கருணை காட்டுவது என்பதே குற்றத்திற்கு துணை போவதாகும். அதை விடுத்து, அவரிடம் பெருந்தன்மையாக நடந்து கொண்டதாக மழுப்பலான பதில் அளித்திருப்பது வேடிக்கையாக இருப்பதாகச் சொல்கிறார்கள் பேராசிரியர்கள்.
பெரியார் பல்கலையில் நடந்த ஆசிரியர் நியமனங்களில் நடந்த ஊழல் முதல் தற்போதைய விதிகளை மீறிய மீள்பணியமர்வு வரையிலான விவகாரம் வரை சிறப்பு விசாரணைக்குழு அமைத்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் பேராசிரியர்கள் தரப்பில் எழுந்துள்ளது.