Skip to main content

வீடுகளுக்குச் சென்று ரேஷன் பொருட்கள் வழங்க முடியாது ! - அரசுத்தரப்பு உயர்நீதிமன்றத்தில் விளக்கம் !

Published on 04/04/2020 | Edited on 04/04/2020


எலெக்ட்ரானிக் இயந்திரங்கள், பதிவேடுகளை வீடு வீடாகச் எடுத்துச் செல்ல இயலாது என்பதால்,ஆயிரம் ரூபாய் நிதியுதவி மற்றும் ரேஷன் பொருட்களை வீடுகளுக்குச் சென்று வழங்க முடியாது எனத் தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.
 

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தினக்கூலிகள் உள்ளிட்ட தொழிலாளர்கள் வருவாய் இழப்பை எதிர்கொண்டுள்ளனர்.அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில்,அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் நிதியுதவி, அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் ஆகியன இலவசமாக வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்திருந்தது.
 

 

ration food products supply in home facilities not chennai high court


நிதியுதவி, ரேஷன் பொருட்களைக் குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்குச் சென்று வழங்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் ராஜேஷ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கை நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ் குமார் அடங்கிய அமர்வு வீடியோ கால் மூலம் விசாரித்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், நிதியுதவியையும், ரேஷன் பொருட்களையும் பெற குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்குச் சென்று டோக்கன்கள் வழங்கப்பட வேண்டும் எனவும், தினமும் 100 குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டும் இவை வழங்கப்பட வேண்டும் எனவும் விரிவான விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
 

ration food products supply in home facilities not chennai high court


மேலும், எலெக்ட்ரானிக் இயந்திரங்கள், பதிவேடுகளை வீடு வீடாக எடுத்துச் செல்வதென்பது இயலாத காரியம் என்பதால்,வீடுகளுக்குச் சென்று ரேஷன் பொருட்கள் வழங்க முடியாது எனத் தெரிவித்த அவர்,நிதியுதவியும், ரேஷன் பொருட்களும் விநியோகிக்கும் போது, சமூக விலகலைப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

இதைப் பதிவு செய்த நீதிபதிகள், நிதியுதவி மற்றும் ரேஷன் பொருட்கள் விநியோகிக்கும் போது, சமூக விலகலைக் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி, மனுவுக்கு ஏப்ரல் 9-ம் தேதிக்குள் பதிலளிக்க அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளிவைத்தனர்.

 

சார்ந்த செய்திகள்