சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மைதானத்தில் இந்தியா- மேற்கிந்திய தீவுகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டிக்கு இன்றும் டிக்கெட் விற்பனை நடைபெறுகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் டி & இ கேலரிக்களுக்கான டிக்கெட் விற்பனை இன்று (15.12.2019) காலை 10.00 மணிக்கு தொடங்குகிறது. போட்டி நடைபெறும் தினத்தில் டிக்கெட் விற்பனை நடைபெறுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி போட்டியில் பங்கேற்காததால் டிக்கெட் விற்பனையில் மந்தம் என கூறப்படுகிறது.
இதனிடையே கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு சேப்பாக்கத்தைச் சுற்றியுள்ள 5 சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பெல்ஸ் சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. கெனால் சாலை ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டு பாரதி சாலை, வாலாஜா சாலையில் இருந்து வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வாலாஜா சாலையில் அனுமதி பெற்ற வாகனங்கள் மற்றும் மாநகரப் போக்குவரத்துக் கழக வாகனங்கள் வாலாஜா சாலை, பெல்ஸ் சாலை வழியாக அனுமதிக்கப்படும்.
காமராஜர் சாலையில் போர் நினைவு சின்னம் மற்றும் காந்தி சாலையில் இருந்து வரும் அனுமதி பெற்ற வாகனங்கள் மற்றும் மாநகரப் போக்குவரத்துக் கழக வாகனங்கள் பாரதி சாலை வழியாக கெனால் சாலை செல்ல அனுமதிக்கப்படும். அனுமதி சீட்டு இல்லாமல் வரும் வாகனங்கள் கடற்கரை சாலை, சுவாமி சிவானந்தா சாலையிலும் உரிய வழித்தடங்களில் சென்று வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம் என்று சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.|