வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டையில் கலைஞர் பாதை என்கிற பெயரில் பத்திரிகை ஒன்றை நடத்தி அதன் ஆசிரியர் பொறுப்பில் உள்ளாராம் குணசேகரன் என்பவர். இவர் முகநூலில் தொல்.திருமாவளவனை பற்றி பதிவு ஒன்றை பதிந்துள்ளார்.
![ranipet incident](http://image.nakkheeran.in/cdn/farfuture/rp5AIk6Vk2aNaiOJyQVDVq9FUDzJhlErczmL_A7gaEM/1574145654/sites/default/files/inline-images/vck%20in_0.jpg)
இந்த பதிவினால் கோபம் அடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் குண்டா(எ)சார்லஸ், காரை.தமிழ் மற்றும் நிர்வாகிகள் சிலர் இராணிப்பேட்டை நகரில் முத்துகடை பகுதியில் சென்று கொண்டு இருந்த ஆசிரியர் குணசேகரனை, வழிமறித்து நடுரோட்டில் வைத்து, எங்கள் தலைவரைப்பற்றி எப்படி எழுதலாம் என சுற்றி வளைத்து அடித்து உதைத்து அவருடைய உடைகளை கிழித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுப்பற்றிய 30 நொடி வீடியோ மட்டும் சமூக வளைத்தளத்தில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுப்பற்றி குணசேகரன், ராணிப்பேட்டை நகர காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளாராம். அதேபோல் விடுதலை சிறுத்தைகள் சார்பிலும் புகார் தரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த மாதம் அரிவாள் வைத்து பிறந்தநாள் கேக்கை வெட்டியதை விசாரித்த இராணிப்பேட்டை நகர காவல்நிலைய அதிகாரிகளை, அரிவாளால் வெட்ட முயன்ற வழக்கில் இதே பகுதியை சேர்ந்த விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட தொண்டரணி நிர்வாகி கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.