கடல்வாழ் உயிரினங்களின் உயிர்க்கோள காப்பக மன்னார்வளைகுடாப் பகுதியான ராமேசுவரத்தில் பாம்பன் கடல் பகுதியில் கடல் நீரின் நிறம் பச்சையாக மாறியது மட்டுமில்லாமல், அப்பகுதியில் மீன்களும் இறந்து குவிவதால் மீனவர்கள் மத்தியில் மட்டுமல்லாது பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
எண்ணற்ற உயிரிகளையும், ஏராளமான கடல்வளத்தையும் உள்ளடக்கியது மன்னார்வளைகுடாப் பகுதி. ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் உள்ள இப்பகுதியிலுள்ள பாம்பன் குந்துகால் சின்னபாலம் கடல் பரப்பு, சிங்கிலி தீவு மற்றும் குருசடை தீவு உள்ளிட்ட பல தீவுகளை உள்ளடக்கிய இக்கடல் பகுதி மிகவும் முக்கியமானது. இங்குள்ள பாம்பன் குந்துகால் பகுதியில் நேற்று மாலை வேளையில், நீல நிறத்திலுள்ள கடல் திடுமென பச்சை வண்ணத்திற்கு மாறி காட்சியளித்தது. அத்துடன் மாசுகள் குவிந்து நுரை மிதந்ததால் சுவாசிக்க வழியின்றி, இப்பகுதியிலுள்ள கிளி, ஓரா மீன்கள் செத்து குவிந்தது. இதனால் பதட்டமடைந்த மீனவர்களும், பொதுமக்களும் அருகிலுள்ள மண்டபம் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த ஆராய்ச்சி நிலையத்தார் பெரிய பெரிய டப்பாக்களில் நீரை சேமித்தவர்கள், இறந்து கிடந்த மீன்களையும் ஆய்வுக்காக எடுத்து சென்றனர். ''இது ஜூலை முதல் செப்டம்பர் வரை கடலில் இயற்கையாக நடக்கக்கூடிய மாற்றமே" என்றனர். எனினும், நேற்று மீன்கள் இறந்த நிலையில் இன்று நண்டுகளும் இறந்து கிடக்க, இதற்காகவே காத்திருக்கும் பறவைகளும் மயங்கி, இறந்து கிடக்கும் மீன்களை உணவிற்கு எடுத்துச் சென்று அக்கம் பக்கத்திலுள்ள குடியிருப்புப் பகுதியில் போடுவதால் நோய் தொற்று அபாயமும் ஏற்பட்டுள்ளது.
"கடலில் காணப்படும் ஒரு வகை பாசியான டைடோபிளாங்டன் - ஆல்கே என்ற தாவர நுண்ணுயிர்கள் கடலின் நீல நிறத்தை கிரகித்து பச்சை வண்ணமாக மாற்றுகிறது. கடலில் இந்த பச்சை நிறங்கள் எங்கெங்கு காணப்படுகின்றதோ அதில் அதிகப்படியான வெப்பமும், கார்பன் டை ஆக்சைடும் கண்டிப்பாக இருக்கும். அது ஆபத்தானதும் கூட. இனிவரும் காலங்களில் அனைத்துக்கடல்கள் நீல நிறத்திலிருந்து பச்சை வண்ணமாக மாற சாத்தியம் அதிகம்" என தனது ஆய்வில் எச்சரித்துள்ளது அமெரிக்காவிலுள்ள மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் என்பதும் நினைவிலிருக்க வேண்டிய ஒன்று.