![Discovery of the missing person's skeleton](http://image.nakkheeran.in/cdn/farfuture/PYYWkMps5P7cIeZkzUq0-drquRpFp0gU3a6slhs2k-g/1639993562/sites/default/files/inline-images/dead-body_19.jpg)
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ளது கரையாம்பாளையம். இந்த ஊரைச் சேர்ந்தவர் தனபால். இவரது மகன் 30 வயது காமராஜ். இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி வீட்டிலிருந்து கிளம்பியவர் டவுனுக்குச் சென்றுவிட்டு வருவதாக தனது மனைவியிடம் கூறிவிட்டுச் சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் காமராஜ் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது மனைவி புஷ்பா கடந்த நவம்பர் 17ஆம் தேதி திருப்பாலபந்தல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவந்தனர். இந்நிலையில், காமராஜ் ஊரான அதே கரையாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவரது கரும்பு தோட்டத்தை ஒட்டியிருக்கும் ஓடக்கரை பகுதியில் உள்ள ஒரு வேப்ப மரத்தின் கீழே உதிர்ந்த நிலையில் ஒரு எலும்புக்கூடு கிடந்துள்ளது. நேற்று (19.12.2021) மதியம் தற்செயலாக வயலுக்குச் சென்ற முருகன், இதனைப் பார்த்த அதிர்ச்சியில் உடனடியாக இதுகுறித்த தகவலைக் காவல்துறைக்குத் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
காணாமல் போன தனது தம்பி காமராஜ் எலும்புக்கூடுதான் அது என்றும், எலும்புக்கூடு அருகில் காமராஜ் அணிந்திருந்த அவரது ஆடைகள் கிடந்தன, அதனை அடையாளமாக வைத்து காமராஜ்தான் இது என்று அவரது அண்ணன் தனசேகர் அடையாளம் காட்டியுள்ளார். இதுகுறித்து திருப்பாலப்பந்தல் போலீசார் வழக்குப் பதிவுசெய்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். காமராஜ் தற்கொலை செய்துகொண்டாரா, கொலை செய்யப்பட்டாரா? அவரது மரணத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். நான்கு மாதங்களுக்கு முன்பு காணாமல் போனவர் எலும்புக்கூடாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் திருக்கோவிலூர் பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.