Skip to main content

அரசு வழங்கும் அதிகாரப்பூர்வ டோக்கன்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு! - உயர் நீதிமன்றத்தில் அரசு உத்தரவாதம்!

Published on 30/12/2020 | Edited on 31/12/2020

 

pongal gift case in highcourt

 

அரசு வழங்கும் அதிகாரப்பூர்வ டோக்கன்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு வழங்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது. இதற்கான சுற்றறிக்கையை நாளை (31ஆம் தேதி) மாலை 5 மணிக்குள் வெளியிட வேண்டுமென நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

 

பொங்கல் பரிசுத் தொகையாக அரிசி அட்டைதாரர்களுக்கு 2,500 ரூபாய் வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்திருந்தது. ஜனவரி 4ஆம் தேதி முதல் பரிசுத் தொகை பெறுவதற்கான டோக்கன்கள் வழங்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த டோக்கனில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்களின் படங்கள் மற்றும் அதிமுக கட்சியின் சின்னம் இடம்பெற்றுள்ளன. 

 

இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மனுத் தாக்கல் செய்துள்ளார். அதில், ‘மக்கள் வரிப்பணத்த்தில் அரசு சார்பில் செயல்படுத்தப்படும் இந்த பொங்கல் பரிசுத் தொகை திட்டத்தில் வழங்கப்படும் டோக்கன் மூலமாக, அதிமுக கட்சியினர் சுயவிளம்பரம் தேடிக் கொள்வது, தேர்தல் ஆணைய அறிவிப்பாணைக்கு எதிரானது. மேலும், இந்த டோக்கன்கள் ஆளும்கட்சியினர் மூலம் வழங்கப்படுவதால், அனைத்து பயனாளிகளுக்கும் இந்தப் பரிசுத் தொகை போய்ச்சேராது’ எனப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென, நீதிபதிகள் மகாதேவன் மற்றும் அனிதா சுமந்த் ஆகியோர் அமர்வில், மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் முறையீடு செய்தார்.

 

அதன்படி, இந்த வழக்கை நீதிபதிகள் விசாரித்தபோது, அரசுத் தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண் ஆஜராகி, ‘தமிழகத்தில் இரு இடங்களில் மட்டுமே அதிமுக தலைவர்களின் படங்கள் இடம்பெற்ற டோக்கன் விநியோகிக்கப்பட்டுள்ளது. கட்சியினர் ஆர்வ மிகுதியால் வழங்கியுள்ளனர். தமிழகத்தின் மற்ற அனைத்து இடங்களிலும், அரசின் அதிகாரப்பூர்வ டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படும். மேலும், பொங்கல் பரிசுக்கான அதிகாரப்பூர்வ டோக்கன்களுக்கு மட்டுமே பரிசுப்பொருள் மற்றும் பரிசுத்தொகை வழங்க வேண்டுமென ரேசன் கடைகளுக்கு சுற்றறிக்கை அனுப்பவிருக்கிறோம்’ எனத் தெரிவித்தார்.

 

அதனைப் பதிவுசெய்த நீதிபதிகள், ‘அரசு வழங்கும் அதிகாரப்பூர்வ டோக்கன்களைத் தவிர வேறு எந்த டோக்கனும் வழங்கக்கூடாது. அரசின் சுற்றிறிக்கையை நாளை (31ஆம் தேதி)  மாலை 5 மணிக்குள் தமிழக அரசு வெளியிட வேண்டும்’ என அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், அவ்வாறு வெளியிடாவிட்டால் நீதிமன்றத்தை திமுக நாடலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்