நாகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் குறித்து அவதூறாக ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட நபர் மீது போலீசார் வழக்குப் பதிவுசெய்துள்ளனர்.
நாகை, வெளிப்பாளையம் சங்கரவிநாயகர் கோயிலை அடுத்துள்ள மேல்சந்து பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீவரன். அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் குறித்து தொடர்ந்து அவதூறு பரப்பியபடியே இருந்துள்ளார்.
இந்த நிலையில், தமிழக முதல்வர் மீது அவதூறு பரப்பிய நபர் மீது நாகை வெளிப்பாளையம் தாமரைகுளம் தென்கரையைச் சேர்ந்த திமுக நிர்வாகி விமல்மொக்கை என்பவர், வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்ற போலீசார், ஸ்ரீவரன் ஃபேஸ்புக் பக்கத்தில் உள்ள முதல்வர் குறித்த அவதூறு கருத்துக்களைக் கண்டறிந்தனர். பின்னர் ஸ்ரீவரன் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்ததோடு, தலைமறைவாக உள்ள நபரை தேடி வருகின்றனர்.
ஏற்கனவே நாகை சட்டமன்றத் தொகுயில் போட்டியிட்டு வெற்றிபெற்ற விசிக கட்சியின் எம்.எல்.ஏ ஆளூர் ஷாநவாஸ்க்கு ஃபேஸ்புக் மூலம் கொலை மிரட்டல்விட்டதும், பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லாவை பற்றி உதாசீனப்படுத்தி பதிவிட்டு சிலர் கைதாகியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.