நடைபெற இருக்கின்ற சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கு திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் போட்டியிடுகிறார். இதனையொட்டி சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கூட்டணி கட்சிகளை சேர்ந்த செயல்வீரர்கள் கூட்டம் சிதம்பரத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு திமுகவின் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். கூட்டத்தில் தொல். திருமாவளவன் செயல்வீரர்களிடம் வாக்கு கேட்டு பேசுகையில், ’’இது செயல்வீரர்கள் சமயோசிதமாக செயல்படும் நேரம். தேர்தல் நேரத்தில் எப்படி செயல்பட போகிறோம் என்ற அட்டவணையை வகுத்துக்கொள்ள வேண்டும். கட்சிப்பணி வேறு, தேர்தல் பணி வேறு. கூட்டணிக் கட்சியினரை ஒருங்கிணைத்து செயல்பட்டால் 40க்கு 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும்.
என்னை தைலாபுரம் தோட்டத்திற்கு அழைத்து வாழையிலை விரித்து சாப்பாடு பரிமாறிய ராமதாஸ் திமுக ஒரு துரோக கட்சி அது அழிந்து போக கூடியது. ஆகவே திமுகவில் இருந்து வெளியே வரவேண்டும் என்று என்னை வற்புறுத்தினார். அதை நான் உதாசீனப்படுத்தினேன் அன்றிலிருந்து என் மீது வீண் பழி சுமத்தி சேற்றை வாரி தூற்றி வருகிறார். ஒளிவு மறைவின்றி திறந்த புத்தகமாக வாழ்ந்து வருகிறேன், திமுகவில் சீட்டு மட்டும்தான் கிடைக்கும் நோட்டு கிடைக்காது என்று எண்ணி சாதி அடிப்படையில் வாக்கு சதவீதத்தை காட்டி பேரம் பேசி கூட்டணி அமைத்துள்ளனர். அது வர்த்தக ரீதியான வியாபார கூட்டணி திமுக தலைமையிலான கூட்டணி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மக்களுக்கு எதிரான பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு உருவான கொள்கை ரீதியான கூட்டணி. அதிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிபந்தனையற்ற கூட்டணி என்று அறிவித்தது. நம்மிடம் ஒரே குரல் தான் ஒளிக்க வேண்டும் மோடியை விரட்டியடிக்க வேண்டும் ராகுலை பிரதமர் ஆக்க வேண்டும் என்பதுதான்.
மோடி மறுபடியும் பிரதமராக வந்தால் இனிமே நாட்டில் தேர்தல் நடக்காது, மாநில கட்சிகளை ஒழிக்க பிஜேபி அனைத்து வேலைகளையும் செய்துள்ளது. மோடியால் சிறு குறு தொழில்கள் அழிந்துவிட்டது. விவசாயம், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கார்ப்பரேட்டுகளின் செல்லப்பிள்ளையாக மோடி திகழ்கிறார். அம்பானி, அதானிக்கு ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட வெளிநாடு சென்று வருகிறார். கார்ப்பரேட் பிரதமராகவே உள்ளார். இந்து சமூகத்தின் முதல் எதிரி மோடி ஜாதி வாரியாக மக்களை பிரித்து மொத்த வியாபாரியாக செயல்படுகிறார்.
பொள்ளாச்சியில் நடந்த சம்பவத்திற்கு குற்றம்சாட்டபட்டவர்கள் இந்த சாதியை சார்ந்தவர்கள் என்று நான் ஒருபோதும் கூறியது இல்லை. இதனை எதிர்த்து திமுக, இடதுசாரி, விடுதலை சிறுத்தைகள் கட்சி போராடுகிறது. சில யோக்கி சீலர்கள் கண்டுகொள்வதில்லை. இந்தத் தேர்தலில் மதவாதமா, ஜனநாயகமா என்று முடிவு செய்ய வேண்டும். சாதி வெறி தூண்டல்களில் சிக்க வேண்டாம். எக்காலத்திலும் சாதியவாதம் மதவாதம் உள்ள பிஜேபியுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணியில் இருக்காது. என்னை சாதியைச் சொல்லி மட்டுமே குற்றம் சுமத்த முடியும் வேறு எந்த குற்றத்தையும் சொல்ல முடியாது.
கடந்த 2009 தேர்தலை விட தற்போது பிரகாசமாக உள்ளது. சமூக வலைதளங்களில் பரவும் அவதூறு பிரச்சாரத்திற்கு தொண்டர்கள் பதில் சொல்ல வேண்டாம். தேசத்தின் தீங்கு மோடியை அகற்ற அனைவரும் கொள்கை ரீதியில் செயல்பட வேண்டும்’’ என்றார்.
கூட்டத்தில் திமுக நகர செயலாளர் செந்தில்குமார், ஒன்றிய செயலாளர்கள் மாமல்லன், முத்துபெருமாள். காங்கிரஸ் மாவட்டத் தலைவர் நகர் பெரியசாமி, சிபிஎம் மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மாவட்ட செயற்குழு ரமேஷ்பாபு, ராமச்சந்திரன். சிபிஐ மாநில நிர்வாகி மணிவாசகம், மதிமுக மாவட்ட செயலாளர் குணசேகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் அறவாழி, சிதம்பரம் தொகுதி பொறுப்பாளர் வன்னியரசு, டி வி கே கட்சியின் மாவட்ட செயலாளர் முடிவண்ணன், மாநில நிர்வாகி ரமேஷ். மனிதநேய ஜனநாயக கட்சி முகமது இக்பால், மனிதநேய மக்கள் கட்சி முகமது இமான். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ரகுமான் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கலந்து கொண்டனர். இதே போல் புவனகிரி, காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதிக்குஉட்பட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.