நடிகர் ரஜினிகாந்த் இன்று மாலையில் போயஸ்கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், காஷ்மீர் விவகாரம் குறித்து தெரிவித்த கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் வலுத்து வருவது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர்,’’எதை அரசியலாக்க வேண்டும் எதை அரசியலாக்க கூடாது என்பதை சில அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியாவுக்குள் பயங்கரவாதிகள் ஊடுறுவ காஷ்மீர் நுழைவுவாயிலாக உள்ளது. மேலும், காஷ்மீர் என்பது பயங்கரவாதிகளுக்குக் தாய்வீடாக உள்ளது. ஆகவே, காஷ்மீர் விவகாரம் நாட்டின் பாதுகாப்பு பிரச்சனை. நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது என்பதால் நான் பாராட்டு தெரிவித்தேன்.
காஷ்மீர் மசோதாவை முன்கூட்டியே தெரிவித்திருந்தால் எதிரிகள் விழித்துக் கொண்டிருப்பார்கள். காஷ்மீர் விவகாரத்தை மோடியும், அமித்ஷாவும் ராஜதந்திரத்துடன் கையாண்டிருக்கிறார்கள்’’என்று தெரிவித்தார்.
தமிழக அரசியல் மையமாக போயஸ்கார்டன் மீண்டும் வருமா? என்ற கேள்விக்கு, ’காத்திருந்து பாருங்கள்’ என்று தெரிவித்தார்.
கட்சி அறிவிப்பு எப்போது என்ற கேள்விக்கு, ’கட்சி அறிவிப்பு எப்போது என்பதை ஊடகங்கள் முன்பு கண்டிப்பாக தெரிவிப்பேன்’என்றார்.