தமிழகத்தில் பல மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கியிருக்கும் சூழலில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பொழிந்து வருகிறது. குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மழை நீடித்து வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் காலை முதலே மிதமான வெப்பம் மற்றும் பனிமூட்டம் இருந்தது. இருப்பினும் பிற்பகல் வேளையில் கருமேகம் சூழ்ந்த நிலையில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை பெய்தது.
குறிப்பாக மூஞ்சிகல், எரிச்சாலை, அண்ணாநகர் பேருந்து நிலையம் உள்ளிட்ட பல பகுதிகளில் மழையானது பொழிந்தது. இந்நிலையில் கொடைக்கானல் பேருந்து நிலையத்திலிருந்து வத்தலகுண்டு நோக்கிச் சென்ற அரசு பேருந்து ஒன்றின் மேற்கூரை சேதம் அடைந்ததால் பேருந்துக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் அவதியுற்ற பயணிகள் மழை நீரில் நனைந்தபடியும், பேருந்துக்குள்ளே குடையை பிடித்தபடியும் பயணித்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. மலைப் பகுதிகளைச் சார்ந்த பேருந்துகளை தரமான முறையில் இயக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.