புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் 1.62 கிமீ சுற்றளவுள்ள சங்ககால கோட்டை கண்டறியப்பட்டு கோட்டைக்கு வெளியே இரும்பு உருக்கு ஆலை, உருக்கு கழிவுகள், சுடுமண் குழாய்கள் போன்றவையும் கோட்டையின் மேலே சங்ககால செங்கல் கட்டுமானத்துடன் கோட்டை பாதுகாப்பு வீரர்கள் நிற்கும் கொத்தளம் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டது.
கோட்டையின் உள்ளே நீர்வாவி குளத்தில் கிடந்த நடுகல்லில் கால்நடைகளைத் திருட வந்த திருடர்களை விரட்டியடித்து உயிர்நீத்த கணம்குமரன் என்ற வீரனின் நடுகல்லில் தமிழி கல்வெட்டு கண்டறியப்பட்ட அந்த கல் எழுத்தாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல பல வண்ணத்திலும் பல வகையான கனத்திலும் பானை ஓடுகள், மணிகள் உள்ளிட்ட பொருட்களுடன் பழைய கட்டுமானத்தின் மேற்கூரை ஓடுகளும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் சங்ககால கோட்டையில் அகழாய்வு செய்ய வேண்டும் என்று புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகம் வழக்கு தொடர்ந்த நிலையில், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் பேராசிரியர் இனியனை இயக்குநராகக் கொண்டு அகழாய்வு செய்ய அனுமதி வழங்கப்பட்டு கடந்த 30 ந்தேதி அகழாய்வுப் பணிகள் தொடங்கி 5வது நாளாகத் தொடர்கிறது. இந்நிலையில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் கே.பார்த்தசாரதி அகழாய்வு நடக்கும் இடத்திற்குச் சென்று பார்வையிட்டு, "தொடர்ந்த பணி சிறப்பாக நடக்கட்டும் சிறப்பான வரலாற்றுப் பொக்கிஷங்களைக் கண்டறிய வாழ்த்துகள்" என்று அகழாய்வுக் குழுவினரைப் பாராட்டினார்.